Published : 08 Jun 2025 07:11 AM
Last Updated : 08 Jun 2025 07:11 AM
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்துக்காக பிரபல யூடியூபர் ஜோதி மல்கோத்ராவை, ஹரியானா போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர்.
கடந்த வாரம் மற்றொரு யூடியூபர் ஜஸ்பிர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இருவரும் இந்தியாவின் ராணுவ முகாம்கள், நடமாட்டங்கள் குறித்த தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.க்கு பகிர்ந்தது தெரிய வந்துள்ளது. மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஷ் என்பவருடன் தொடர்பில் இருந்ததும், அவரது அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு பல முறை சென்று வந்ததும் அங்கு பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அதிகாரிகளை சந்தித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரி டேனிஷ் இந்தியாவில் இருந்து கடந்த மாதம் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில்,ஜோதி மல்கோத்ரா, ஜஸ்பிர் சிங் ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்திய போது நசிர் என்பவரின் பெயர் தெரிய வந்தது. இவர் பாகிஸ்தானில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். பின்னர் யூடியூப் சேனல் தொடங்கி பிரபலமாகி உள்ளார். அத்துடன் பாகிஸ்தானின் பைசலாபாத்தில் டிராவல் ஏஜென்சியும் நடத்தி வருகிறார். அத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலிலும் உள்ளார். பாகிஸ்தானில் உள்ள உறவினர்களை சந்திக்கஇந்தியர்களுக்கு தாராளமாக விசா வழங்க வேண்டும் என்று தனது யூடியூப் சேனலில் நசீர் வலியுறுத்தி வந்துள்ளார்.
அப்போதுதான், இந்திய யூடியூபர்களை வளைத்து போட நசீர், அவரது தோழி நவுஷபா செஷாத் ஆகியோருக்கு ஐஎஸ்ஐ பணி வழங்கி உள்ளது. அதன்படி, இந்திய யூடியூபர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் மூலம் ஐஎஸ்ஐ.க்கு உளவு பார்க்க வைத்துள்ளனர். அதற்காக இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் மூலம் அவர்கள் பாகிஸ்தானுக்கு வரவழைக்கப்படுகின்றனர்.
அங்கு அவர்கள் தங்குவதற்கு 5 நட்சத்திர ஓட்டல் உட்பட பல்வேறு வசதிகளை நசீர் ஏற்படுத்தி தந்துள்ளார். பின்னர் பாகிஸ்தானுக்கு ஆதரவான வீடியோக்களை எடுத்து தங்களது யூடியூப் சேனலில் இந்திய யூடியூபர்கள் வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT