Last Updated : 07 Jun, 2025 03:33 PM

4  

Published : 07 Jun 2025 03:33 PM
Last Updated : 07 Jun 2025 03:33 PM

ஆந்திராவில் ஊழியர்கள் 10 மணி நேரம் பணி செய்யும் வகையில் சட்டத் திருத்தம்: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

படம்: மெட்டா ஏஐ

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் தொழிற்சலைகளில் தொழிலாளர்கள் தினசரி 10 மணி நேரம் வேலை பார்க்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காகவும், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும் அதிகபட்ச வேலை நேரத்தை ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்ப தொழிலாளர் சட்டங்களை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே. பார்த்தசாரதி, "ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒன்பது மணிநேர வேலையை அனுமதிக்கும் பிரிவு 54 இப்போது ஒரு நாளைக்கு 10 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரிவு 55 இன் கீழ், ஐந்து மணிநேர வேலைக்கு ஒரு மணி நேரம் ஓய்வு என்று உள்ளது. அது இப்போது 6 மணிநேரமாக மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, overtime காலாண்டுக்கு 75 மணிநேரம் வரை என்று இருந்தது. இது இப்போது 144 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த திருத்தங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் அதிக அளவில் நமது மாநிலத்திற்கு வருவார்கள். இந்த தொழிலாளர் விதிகள் தொழிலாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் சாதகமாக இருக்கும். உலகமயமாக்கல் ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கிறது. உலகளாவிய விதிகளை செயல்படுத்த இந்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும், இரவு நேரப் பணிகளில் அதிக அளவில் பெண்கள் வேலை செய்ய ஏதுவாக அமைச்சரவை இரவு நேரப் பணி விதிகளையும் தளர்த்தியுள்ளது. முன்பு பெண்கள் இரவுப் பணிகளில் பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை. இப்போது அவர்கள் போக்குவரத்து வசதி, பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளுடன் பணியாற்ற முடியும். இரவுப் பணிகளின்போது பெண்களின் பணியிடம் முழுமையாக வெளிச்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

நீங்கள் கூடுதலாக வேலை செய்யும்போது, ​​வருமானம் அதிகரிக்கும். இந்த விதிகளால் பெண்கள் முறையான துறைகளில் பணியாற்ற முடியும். அவை பெண்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிக்கின்றன. மேலும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன." என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ஆந்திரப் பிரதேச அமைச்சரவையின் இந்த முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே ராமகிருஷ்ணா, "கடந்த 11 ஆண்டுகளாக, மோடி அரசாங்கம் இந்தியாவில் தொழிலாளர்களின் உரிமைகளை மீறும் நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் எடுத்து வருகிறது.

இந்த விதிகளை எதிர்க்கும் வகையில், ஜூலை 9 ஆம் தேதி இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. இந்த போராட்டத்தில் அனைத்து பிரிவுகளும் தீவிரமாக பங்கேற்கும்," என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x