Published : 07 Jun 2025 11:50 AM
Last Updated : 07 Jun 2025 11:50 AM
புதுடெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி இந்தியாவில் 5,364 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 764 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கேரளாவில் 2 பேர், பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் என மொத்தம் நான்கு பேர் கோவிட் 19 பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கேரளா தொடர்ந்து அதிக பாதிப்புக்குள்ளான மாநிலமாக உள்ளது, கேரளாவில் நேற்று ஒரே நாளில் 192 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து குஜராத் (107), மேற்கு வங்கம் (58) மற்றும் டெல்லி (30) என நாடு தழுவிய அளவில் 498 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 114 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி முதல் மொத்தம் 1,276 பேர் மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் இந்த ஆண்டில் கரோனா இறப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
தயார்நிலை ஒத்திகை - நாட்டில் கரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், ஜூன் 5 அன்று, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கோவிட்-19 பாதிப்பை கையாள்வதற்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக ஒத்திகை பயிற்சியை நடத்தின. கோவிட்-19 பரவலை நிர்வகிக்க ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள், தனிமைப்படுத்தும் படுக்கைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மே 2023 இல் கோவிட்-19-ன் பொது சுகாதார அவசர நிலையை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வந்தது. சுகாதார நிபுணர்கள் இப்போது இந்த பாதிப்பை பருவகால, உள்ளூர் அல்லது குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமேயான பாதிப்பாக குறிப்பிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT