“நாங்கள் இனி எங்கு ஆட்சிக்கு வந்தாலும் 50% இடஒதுக்கீடு வரம்பை நீக்குவோம்” - பிஹாரில் ராகுல் உறுதி

“நாங்கள் இனி எங்கு ஆட்சிக்கு வந்தாலும் 50% இடஒதுக்கீடு வரம்பை நீக்குவோம்” - பிஹாரில் ராகுல் உறுதி
Updated on
1 min read

பாட்னா: "வரும் காலத்தில் நாங்கள் (காங்கிரஸ்) எங்கு அரசாங்கத்தை அமைத்தாலும், 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்குவோம். அது பிஹாரில் இருந்து தொடங்கும்," என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிஹாரின் ராஜ்கிர் நகரில் நடைபெற்ற அரசியலமைப்பை பாதுகாப்போம் நிகழ்ச்சியில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, "பிஹாரில் சட்டம் ஒழுங்கு நிலைமை முழுமையாக கெட்டுவிட்டது. ஒரு காலத்தில் அமைதி மற்றும் நீதிக்கான பூமியாகக் கருதப்பட்ட பிஹார், இப்போது இந்தியாவின் குற்றத் தலைநகராக மாறிவிட்டது.

அரசியலமைப்பைக் காப்பாற்றவும், நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காகவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நான் போராடுகிறேன். எதிர்காலத்தில் நாங்கள் எங்கு அரசாங்கத்தை அமைத்தாலும், இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம். அது பிஹாரில் இருந்து தொடங்கும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதற்கான படிவங்கள் மிகவும் முக்கியமானவை. பல்வேறு கேள்விகளைக் கொண்ட அந்த படிவம் எவ்வாறு தயாரிக்கப்படும் என்ற கவலை தற்போது எழுந்துள்ளது. ஓபிசி, தலித், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் பங்கேற்பு இல்லாமல், படிவங்கள் இறுதி செய்யப்பட்டுவிடுமோ என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. அவ்வாறு நடந்தால் அது முறையான கணக்கெடுப்பாக இருக்குமா?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடமிருந்து ஒரு அழைப்பு வந்தும், நரேந்திர மோடி சரணடைந்தார். இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் குறைந்தபட்சம் 11 முறையாவது வெளிப்படையாக கூறிவிட்டார். ஆனால், பிரதமர் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கிறார். இது குறித்து அவருக்கு எதுவும் சொல்ல முடியாது என்பது எனக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in