Published : 20 Aug 2014 09:29 AM
Last Updated : 20 Aug 2014 09:29 AM

முக்கால்வாசிப் பேர் மீது திருட்டு வழக்கு: உ.பி.யில் வித்தியாசமான ஒரு கிராமம்

டெல்லியில் இருந்து சுமார் 140 கி.மீ தொலைவில் உள்ள நகரம் அலிகர். பூட்டு தொழிலுக்கு பிரசித்தி பெற்ற இந்த நகரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள பாக் பத்தீக் எனும் கிராமம் திருட்டுத் தொழிலுக்கு பிரசித்தி பெற்றதாக உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்தரஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள பாக் பத்தீக் கிராமத்தில் சுமார் முக்கால்வாசி பேர் மீது திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளன.

திருட்டு இம்மக்களின் பாரம்பரியத் தொழிலாம். இவர்களுக்கு கல்வி அறிவு இல்லை. வேறு தொழிலைக் கற்றுக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை.

இக்கிராமத்தில் உள்ள 1,000 பேரில் முக்கால்வாசிப்பேர் மீது ஹாத்தரஸ், மத்துரா, ஆக்ரா, அலிகர், ஏட்டா மற்றும் டெல்லியில் உள்ள காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.

கொல்கத்தா-டெல்லி ரயில் பாதை வழியாகச் செல்லும் ரயில் பெட்டிகளிலும் பத்தீக் கிராமத்தினர் வழிப்பறி செய்வதாக புகார் உள்ளது.

அக்கம் பக்கம் உள்ள கிராம வயல்வெளிகளில் புகுந்து பத்தீக் வாசிகள் பயிர்களை திருடுவதும் உண்டு எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் அந்த கிராம ஊராட்சித்த தலைவர் தேஜ்வதியின் மகன் ஷேரு சிங் கூறும்போது, “கல்வி அறிவின்மை மற்றும் வறுமைதான் இவர்கள் திருடுவதற்கு முக்கியக் காரணம். ஓரளவுக்கு கல்வி பெற்று திருந்திய வர்கள் அருகிலுள்ள நகரங்களுக்கு மாறி விடுகின்றனர்.

மாநில அரசு சிரத்தை எடுத்து, தொலைநோக்கு திட்டம் எதுவும் செயல்படுத்தினால் மட்டுமே இக்கிராமத்திற்கு விடிவு காலம் வரும்” என்றார்.

ஷேருவின் தந்தையான துராக் சிங், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் பத்தீக்வாசிகளை திருத்த முயன்றுள்ளார். இதற்காக, ஒரு குழு அமைத்து அவர்களை திருத்த எடுத்த முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அதற்குள், ஒரு சாலை விபத்தில் துராக் சிங் இறந்து விட்டார். இந்தப் பணியை அந்த ஊராட்சித் தலைவராக இருக்கும் துராக்கின் மனைவி தேஜ்வதி தொடர்ந்து வருகிறார்.

இந்தக் கிராமத்திற்கு இருக்கும் அவப்பெயரை சாதகமாகக் கொண்ட போலீஸார் அந்தப் பகுதியில் நடைபெறும் குற்றங்களுக்கு பத்தீக்வாசிகள் மீது வழக்கு பதிவு செய்வதாகவும் புகார் உள்ளது.

சபாவ் காவல் நிலைய ஆய்வாளர் அர்விந்த் பிரதாப் சிங் ‘தி இந்து’விடம் கூறும்போது, “அக்கிராமத்தில் சுமார் 40 சதவிகிதத்தினர் மீது எங்கள் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. அந்த கிராமவாசிகளில் ஒருவர் காவல்துறையில் பணியாற்றி வந்தார். அவர், விடுமுறை நாட்களில் திருடுவதை தொழிலாகக் கொண்டிருந்தார். ஒருநாள் பிடிபட்டு பணி நீக்கமும் செய்யப்பட்டார்” என்றார்.

பல நூற்றாண்டுகளாகவே திருடு வதைத் தொழிலாகக் கொண்டிருந்த பத்தீக் சமூகத்தினரை திருத்த இந்தப் பகுதியில் வாழ்ந்த ஒரு ஜாட் சமூ கத்தின் ஜமீன்தார் நிலம் கொடுத்து வாழ்வளித்துள்ளார். ஆனால், அதுவே அவர்கள் மற்ற கிராமத்தினரிடமிருந்து ஒதுங்கி வாழ வாய்ப்பாக அமைந்து விட்டது.

இந்த கிராமவாசிகளுடன் வேறு கிராமத்தவர்கள் திருமண தொடர்புகள் வைப்பதில்லை என்பதால், அவர் களுக்குள்ளாகவே மணம் செய்து கொள்கின்றனர். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் சகோதரர் மற்றும் சகோதரிகளாகக் கருதப்படு கிறார்கள். அதை மீறுபவர்கள் கவுரக் கொலை செய்யப்பட்டு விடுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x