பெங்களூரு காவல் துறை ஆணையர் உட்பட உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்: சித்தராமையா நடவடிக்கை

பெங்களூரு காவல் துறை ஆணையர் உட்பட உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்: சித்தராமையா நடவடிக்கை
Updated on
1 min read

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது ஆர்சிபி அணி. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு நகரில் புதன்கிழமை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் உட்பட உயர் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா.

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் புதன்கிழமை அன்று மாலை பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆர்சிபி வீரர்கள் பங்கேற்றனர். இந்த விழாவை காண ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது ஒரே நேரத்தில் மைதானத்தின் நுழைவு வாயில்களில் அதிகளவிலான மக்கள் உள்ளே நுழைய முயன்ற காரணத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை அன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர்களை முதல்வர் சித்தராமையா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“இது மாதிரியான அசம்பாவிதம் எதிர்பாராத ஒன்று. இதில் 11 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. 56 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அரசு தரப்பில் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமிக்க முடிவு செய்துள்ளோம். பெங்களூரு காவல் ஆணையர், கூடுதல் ஆணையர் உட்பட காவல் துறையின் உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பிரதிநிதிகளை கைது செய்ய முடிவு செய்துள்ளோம். அவர்களின் அலட்சியம் தான் இதற்கு காரணம். இது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு” என அவர் கூறினார்.

பெங்களூரு காவல் ஆணையர், கூடுதல் ஆணையர், கப்பன் பார்க் காவல் நிலையில் பொறுப்பு அதிகாரி உட்பட காவல் துறையின் உயர் அதிகாரிகள் பணியிடை நீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு கர்நாடக மாநில அரசு ரூ.10 லட்சம், ஆர்சிபி அணி ரூ.10 லட்சம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in