“பஹல்காம் பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை” - காங்கிரஸ் விமர்சனம்

“பஹல்காம் பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை” - காங்கிரஸ் விமர்சனம்
Updated on
1 min read

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இது பிரதமர் நரேந்திர மோடிக்கு நிச்சயமாகத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூன் 6) காலை ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமரின் ஜம்மு காஷ்மீர் பயணத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடியுள்ளது.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு நேரடியாகப் பொறுப்பான பயங்கரவாதிகள் இன்னும் பிடிபடவில்லை என்பது நிச்சயம் அவர் அறிந்திருப்பார். அதோடு, டிசம்பர் 2023 -ல் பூஞ்ச் ​​மற்றும் அக்டோபர் 2024 -ல் ககாங்கீர் மற்றும் குல்மார்க்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களிலும் இதே பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக சில தகவல்கள் வந்துள்ளன - அவை இன்னும் மறுக்கப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

நாளை ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் ஜம்மு - ஸ்ரீநகர் இடையே உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். அதன் பிறகு, நாட்டின் முதல் கம்பிவழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தைப் பார்வையிட்டு திறந்து வைக்கிறார். நண்பகல் 12 மணியளவில் கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, கத்ராவில் ரூ.46,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்நிலையில், பிரதமரின் ஜம்மு பயணத்தைக் குறிப்பிட்டு ஜெய்ராம் ரமேஷ் பஹல்காம் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in