மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார்கள்: ஹேமா கமிட்டிக்கு தகவல்கள் தர சாட்சிகள் தயக்கம்

முன்னாள் நீதிபதி ஹேமா
முன்னாள் நீதிபதி ஹேமா
Updated on
2 min read

கொச்சி: மலையாள நடிகர்கள் மீது நடிகைகள், துணை நடிகைகள் கூறிய பாலியல் புகார்கள் விவகாரத்தில் விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி தந்த அறிக்கையின் அடிப்படையில் தொடர்ந்த 34 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இது மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தர சாட்சிகள் தயங்குவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது; அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று மலையாள திரையுலகிலிருந்து சில நடிகைகள் கோரிக்கையை முன் வைத்தனர். அதையேற்ற கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தார்.

அந்த கமிஷனில் நீதிபதி ஹேமா தவிர்த்து நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலகுமாரி ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் தீவிரமாக விசாரித்து தங்களது அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டு முதல்வர்டம் சமர்ப்பித்தனர். ஆனால், அந்த அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் கடந்த ஆண்டுதான் வெளியாயின. அதில் இருந்த தகவல்கள் மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அந்த அறிக்கையில், மலையாளத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மீது நடிகைகள், துணை நடிகைகள் சிலர் பாலியல் வன்முறை புகார்களைக் கூறியிருந்தனர். இதுதொடர்பாக அந்த அறிக்கையில் பல்வேறு நடிகைகளின் புகார்களும் இடம்பெற்றிருந்தன.

இதைத் தொடர்ந்து இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) கேரள உயர் நீதிமன்றம் அமைத்தது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவும் சுமார் 35 வழக்குகளைப் பதிவு செய்து, புகார் கூறியவர்களிடம் தகவல்களை சேகரித்தனர்.

இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சில வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், குழுவின் முன் வாக்குமூலம் அளித்தவர்கள் வழக்கைத் தொடர ஆர்வம் காட்டாததால், சிறப்புக் குழுவானது பெண் திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த 35 வழக்குகளில் 34 வழக்குகளை முடித்துவைத்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதேபோல், இதில் மீதமுள்ள ஒரு வழக்கிலும் அறிக்கை அளித்தவர்கள் அதே நிலைப்பாட்டை மீண்டும் கூறியிருப்பதால், அதையும் இந்த மாதம் முடிக்க கேரள காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில், எஸ்ஐடி குழுவினர் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த அறிக்கையில் எஸ்ஐடி போலீஸார் கூறியிருப்பதாவது: பதிவு செய்யப்பட்ட 35 வழக்குகளில் 34 வழக்குகளில் இடம்பெற்றுள்ள சாட்சிகள், வழக்குக்கு ஒத்துழைப்பு தரவில்லை. நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கவும் அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, இதில் 34 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பாக எஸ்ஐடி குழுவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஹேமா கமிட்டியின் அறிக்கையின் பேரில் பல்வேறு வழக்குகளில் 35 முதல் தகவல் அறிக்கைகளை (எப்ஐஆர்) பதிவு செய்தோம். முதலில் நடைபெற்ற விசாரணையின்போது தகவல் அளித்தவர்கள், தற்போது தகவல் தர மறுக்கின்றனர். இந்த வழக்குகளில் தற்போது 10 முதல் 12 பேரை மட்டுமே விசாரிக்க எங்களால் அணுக முடிகிறது. மற்றவர்கள் எங்களிடம் பேசவே தயங்குகின்றனர்.

நீதிமன்றம் 3 முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் வருவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். மேலும், இந்த பாலியல் புகார்கள் நடந்தது சில வருடங்களுக்கு முன்பு என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளைத் தேடுவதும் கடினமாக அமைந்துள்ளது. அப்படி சாட்சியம் கிடைத்தாலும் அதை அவர்கள் வெளியில் கூறுவதற்கு பயப்படுகின்றனர். அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நேரத்தில் இதுபோன்ற மோசமான நினைவுகளை மீண்டும் வெளியுலகில் தெரிவிப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.

மேலும், இந்த வழக்கில் சாட்சி அளித்தால், சம்பந்தப்பட்ட நடிகைகளின் எதிர்கால திரைத்துறை வாய்ப்பு மோசமாக பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. அவர்களுக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். சாட்சிகள் ஒத்துழைத்தால் மீண்டும் இந்த வழக்குகளை நடத்த எஸ்ஐடி தயாராக உள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in