ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கண்காணித்தார் பிரதமர் மோடி: அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கண்காணித்தார் பிரதமர் மோடி: அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: ‘‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை கடந்த மாதம் 7-ம் தேதி இரவு நடைபெற்றபோது, அதை பிரதமர் மோடி கண்காணித்தார்’’ என பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை கேள்வி பட்டதும் தனது வெளிநாட்டு பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி. முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும், சுதந்திரத்தை அவர்களிடம் ஒப்படைத்தார். இதற்கு முன் இதுபோல் நடைபெற்றதில்லை.

பிரதமர் மோடி தெளிவான மனநிலை கொண்டவர். பதற்றம் அடையமாட்டார். மிகவும் பண்பட்ட மனிதர். அவரது முடிவுகள் சரியாக இருக்கும். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல், தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை கடந்த மாதம் 7-ம் தேதி இரவு மேற்கொண்டபோது, பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரிமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் இருந்த லஷ்கர் - இ- தொய்பா, மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்ட நடவடிக்கையை பிரதமர் மோடி கண்காணித்தார்.

இந்தியாவின் பதிலடி துல்லியமாகவும், கட்டுப்பாடுடன் கூடியதாகவும் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அப்பாவி மக்கள் மீது, ராணுவ தளங்களையும் குறிவைத்து தாக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கவே, பாகிஸ்தானின் விமான தளங்கள் உட்பட ராணுவ மையங்களை இந்தியா தாக்கியது. இதில் பலத்த சேதம் ஏற்பட்டதால், போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது.

பிளாக்மெயில்கள் எல்லாம் பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையிலும், தேசிய அளவில் விடுக்கப்பட்டாலும் அதை அவர் கண்டு கொள்வதில்லை. பாகிஸ்தானின் அணு ஆயுத பிளாக்மெயில்கள் எல்லாம், தீவிரவாதத்துக்கு எதிரான பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை வலுவடையவே செய்தன. இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in