பெங்களூரு வெற்றிப் பேரணி நெரிசல் உயிரிழப்பு: ஆர்சிபி அணி இரங்கல்

பெங்களூரு வெற்றிப் பேரணி நெரிசல் உயிரிழப்பு: ஆர்சிபி அணி இரங்கல்
Updated on
1 min read

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதற்கான வெற்றிப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்துக்கு.அந்த அணி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, “இன்று பிற்பகல் நமது அணியின் வருகையை எதிர்பார்த்து பெங்களூரு முழுவதும் திரண்ட மக்கள் கூட்டம் தொடர்பாக நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். அனைவரின் பாதுகாப்பும் நலமும் எங்களுக்கு மிகவும் முக்கியம்.

இந்த துயர்மிகு உயிரிழப்புகளுக்கு ஆர்சிபி அணி இரங்கல் தெரிவிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். சூழல் குறித்து அறிந்தவுடன், நாங்கள் உடனடியாக எங்கள் திட்டத்தைத் திருத்தியமைத்து, உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையைப் பின்பற்றினோம்.

எங்கள் அனைத்து ஆதரவாளர்களையும் தயவுசெய்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று (ஜூன் 4) வெற்றிப் பேரணி விழா பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீஸார் மற்றும் ரசிகர்கள் உதவினர். பவுரிங் மருத்துவமனை, வைதேகி மருத்துவமனை மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காயமடந்த நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in