பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்

குட்கா எச்சில் உமிழ வேகமாக ஓடிய காரில் கதவைத் திறந்ததால் விபத்து - சத்தீஸ்கரில் ஒருவர் உயிரிழப்பு

Published on

ராய்பூர்: சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் 100 கி.மீ. வேகத்தில் சென்ற சொகுசு காரிலிருந்து எச்சில் உமிழ்வதற்காக ஓட்டுநர் கதவைத் திறந்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

திங்கள்கிழமை நடந்த இந்த விபத்தில் கார் பலமுறை சாலையில் உருண்டு மேலும் இரண்டு வாகனங்களில் மோதியுள்ளது. போலீஸாரின் கூற்றுப்படி, விபத்தில் உயிரிழந்தவர் ஜாக்கி கெஹி (31). பிலாஸ்பூரின் புறநகரான சக்கர்பாதாவைச் சேர்ந்த துணி வியாபாரி ஆவார். இவர் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் ஒரு விருந்தில் கலந்து கொண்டார். விருந்து முடிந்ததும், தனது நண்பர் ஆகாஷ் சந்தானியைக்கு பேசி தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார். ஆகாஷ் அவரது நண்பர் பங்கஜ் சாப்ராவை அழைத்துக்கு கொண்டு இன்னோவா கார் ஒன்றில் ஜாக்கியை கூப்பிடச் சென்றார்.

திரும்பி வருகையில் ஆகாஷ் வாகனம் ஓட்ட, அவரது நண்பர் பங்கஜ் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையிலும், ஜாக்கி பின் இருக்கையிலும் அமர்ந்து இருத்திருக்கிறார்கள். இன்னோவா பிலாஸ்பூர் - ராய்பூர் நெடுஞ்சாலையில் 100 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது ஆகாஷ் தனது வாயில் இருந்த குட்கா எச்சிலை உமிழ்வதற்காக காரின் கதவினைத் திறந்துள்ளார். திடீரென கதவு திறக்கப்பட்டதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் டிவைடர் சுவரில் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கார் வேகமாக மோதியதில் அதில் இருந்த 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். ஜாக்கி கெஹி, டிவைடரின் அருகிலிருந்த கம்பியில் வேகமாக தூக்கி வீசப்பட்டார். இதில் அவரின் தலை, மார்பு, தோள்களில் பலமாக அடிப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலையில் உருண்டு சென்ற இன்னோவா கார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு வாகனத்தில் மோதி மேலும் நான்கு, ஐந்து முறை சாலையில் உருண்டது. இந்த கொடூர காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன.

விபத்து குறித்து அந்த சாலை வழியாக சென்றவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in