Published : 04 Jun 2025 07:30 AM
Last Updated : 04 Jun 2025 07:30 AM

விமான பயணிகள் எண்ணிக்கை 50 கோடியாக உயரும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் ஓராண்டில் 24 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்கின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும். அதாவது 2030-ம் ஆண்டு முதல் ஓராண்டில் 50 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்வர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் 81-வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விமான போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக விண்வெளி மற்றும் விமான போக்குவரத்தில் உலகளாவிய தலைமையாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

தற்போது விண்வெளியில் உள்ள பல்வேறு கோள்களுக்கு பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இனிமேல் பூமியில் உள்ள நகரங்களுக்கு மட்டுமல்ல, பூமியில் இருந்து பல்வேறு கோள்களுக்கும் பயணம் மேற்கொள்ளப்படும். இதற்கு இந்தியா தயாராக உள்ளது.

தற்போதைய சூழலில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய உள்நாட்டு விமான சந்தையாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. இது இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் பொற்கால அத்தியாயம் ஆகும்.

இந்தியாவில் தற்போது ஓராண்டில் 24 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்கின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும். அதாவது 2030-ம் ஆண்டு முதல் ஓராண்டில் 50 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்வர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 35 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இது விரைவில் ஒரு கோடி மெட்ரிக் டன்களாக அதிகரிக்கும். பயணிகள், சரக்கு போக்குவரத்து கணிசமாக அதிகரித்து வருவதால் இந்திய விமான நிறுவனங்கள் தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன.

கடந்த 2014-ம் ஆண்டில் நாட்டில் 74 விமான நிலையங்கள் இருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது 162 ஆக அதிகரித்துள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் 2,000- க்கும் மேற்பட்ட புதிய பயணிகள் விமானங்களை வாங்க ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளன. இன்றைய சூழலில் விமானங்கள் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்கான மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

இந்தியாவில் பணியாற்றும் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இது சர்வதேச சராசரியைவிட அதிகம் ஆகும். இந்திய விமான போக்குவரத்து துறையில் பணியாற்றும் பெண் இன்ஜினீயர்களும் கணிசமாக அதிகரித்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் ட்ரோன் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த துறையிலும் இந்தியா கோலோச்சி வருகிறது. சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் , விவசாயம் மற்றும் விநியாகம் சார்ந்த பணிகளுக்கு ட்ரோன்களை இயக்கி வருகின்றனர். இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகி வருகிறது. பெண்களின் வருவாய் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் விமானங்களை தயாரிக்க வேண்டும். இதற்கு விமான உற்பத்தி நிறுவனங்கள் அதிதீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் விமான பயணத்தை மேற்கொள்ள வழிவகைகளை செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x