Last Updated : 04 Jun, 2025 12:54 AM

33  

Published : 04 Jun 2025 12:54 AM
Last Updated : 04 Jun 2025 12:54 AM

ராஜாஜி, ரஜினி மன்னிப்பு கேட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி - ‘தக் லைஃப்’ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

கன்னட மொழி குறித்த பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததால், அவர் நடித்த 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் நாளை வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற 'தக் லைஃப்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசுகையில், ''தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது''என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக போராட்டங்களில் குதித்தனர்.

கர்நாடக கன்னட கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறும்போது, ''கமல்ஹாசனின் கருத்தால் கன்னடர்களின் மனம் புண்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே கர்நாடகாவில் அவரது திரைப்படம் வெளியாகும்'' என எச்சரித்தார். அதற்கு கமல்ஹாசன், ''நான் எந்த தவறும் செய்யாதபோது, மன்னிப்பு கேட்க மாட்டேன்''என பதிலளித்தார். இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, தக் லைஃப் திரைப்படத்துக்கு க‌ர்நாடகாவில் தடை விதித்தது.

அன்பால் வெளிபட்ட வார்த்தை: இதை எதிர்த்து கமல்ஹாசன் நேற்று முன்தினம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தயான் சென்னப்பா கூறும்போது, '' கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை திரையிட தடை விதித்திருப்பது கருத்துரிமைக்கு எதிரானது. கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிராகவும், கன்னட மக்களுக்கு எதிராகவும் எதையும் பேசவில்லை. சம்பந்தப்பட்ட விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கன்னட நடிகர் சிவராஜ் குமார் உடனான உறவின் ஆழத்தை சொல்வதற்காக கன்னட மொழி குறித்துப் பேசினார். நாம் அனைவரும் ஒரே மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் என சொல்வதற்காகவே அவ்வாறு பேசினார். ரூ.300 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும். எனவே இந்த‌ திரைப்படத்தை வெளியிட அனுமதிப்பதுடன், திரையரங்கங்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என கோரினார்.

நீதிபதி கேள்வி: அதற்கு நீதிபதி நாகபிரசன்னா கூறியதாவது: தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது' என கமல்ஹாசன் சொன்ன‌தற்கு ஆதாரம் இருக்கிறதா? கமல்ஹாசன் வரலாற்று ஆய்வாளாரா? மொழியியல் அறிஞரா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் இவ்வாறு பேசினார். அவரது பேச்சினால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு காரணமான கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கலாமே? அவர் கன்னட மக்களின் மனதை காயப்படுத்திவிட்டு, மன்னிப்பு கேட்க முடியாது என பிடிவாதமாக இருக்கிறார். தனக்கு வணிக ரீதியாக நஷ்டம் ஏற்படும் என்பதால் இப்போது நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

மன்னிப்பு கேட்க மறுப்பவரின் படம் கர்நாடகாவில் ஏன் வெளியாக வேண்டும்? மன்னிப்பு கேட்டால்தான் இங்கு சில கோடி ரூபாய் வசூலாகும். ஒரு வார்த்தையை பேசிவிட்டு அதனை திரும்ப பெற முடியாது. மன்னிப்பு கேட்டால் மட்டுமே அது முடிவுக்கு வரும்.

3 முக்கிய விஷயங்கள்: பிரபலமான ஒருவர் பொதுவெளியில் மொழி சார்ந்த விவகாரங்களை போகிற போக்கில் பேசக்கூடாது. பிரபலமானவராக இருப்பதாலே எதையாவது சொல்லி பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் உரிமை இல்லை. கர்நாடகாவில் மக்கள் 3 விஷயங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவை இந்த மாநிலத்தின் நிலம், நீர், மொழி. இந்த மூன்றையும் அவமரியாதை செய்தால் இங்குள்ள மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

இந்த பிரச்சினையை ஏற்படுத்திய கமல்ஹாசன் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையை கேட்டுவிட்டால் இந்த பிரச்சினை உடனடியாக முடிந்துவிடும். இதுகுறித்து கமல்ஹாசனிடம் பேசுங்கள். இவ்வாறு நீதிபதி கூறினார்.

மன்னிப்பு கேட்க மறுப்பு: இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கமல்ஹாசன் தரப்பு வழக்கறிஞர், கமல்ஹாசன் எழுதிய கடிதத்தை சமர்ப்பித்தார். மேலும் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய வீடியோவையும் காட்டினார். அந்த கடிதத்தை வாசித்த பார்த்த நீதிபதி நாக பிரசன்னா கூறும்போது, ''இந்த கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை. மன்னிப்பு கேட்காமல் ஏன் சுற்றி வளைக்கிறீர்கள். மன்னிப்பு கேட்பதில் கமல்ஹாசனுக்கு என்ன ஈகோ இருக்கிறது? அவர் கன்னட மொழியை மதிப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் மன்னிப்பு கேட்காமல் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறீர்கள்? மேலும், அந்த வீடியோவில் கமல்ஹாசன் தெளிவாக தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என கூறியுள்ளார்''என்றார்.

அதற்கு கமல்ஹாசனின் வழக்கறிஞர் கூறும்போது, ''அவர் தவறாக எதையும் பேசவில்லை. தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. எனவே தற்போதைக்கு கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம். இதுகுறித்து கர்நாடக அரசு மற்றும் திரைப்பட வர்த்தக சபையுடன் பேச ஒரு வார கால அவகாசம் வேண்டும்''என கோரினார். இதையடுத்து நீதிபதி வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வ‌ரும் ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ராஜாஜி, ரஜினி மன்னிப்பு கேட்டதாக நீதிபதி சுட்டிக் காட்டல்: வழக்கு விசாரணையின்போது நீதிபதி நாகபிரசன்னா கூறியதாவது: கடந்த 1950-களில் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரி இதேபோன்ற ஒரு கருத்தை தெரிவித்தார். அதற்கு கன்னட எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்து அவருக்கு கடிதம் எழுதினர். அதன்பிறகு ராஜகோபாலாச்சாரி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். அவரால் மன்னிப்பு கேட்க முடிந்தபோது, கமல்ஹாசனால் ஏன் மன்னிப்பு கேட்க முடியவில்லை.

இதேபோல காலா திரைப்படத்தின்போது நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டார். அதனால் அந்த திரைப்படம் கர்நாடகாவில் வெளியானது. இந்தியாவில் மாநிலங்கள் மொழிரீதியாக பிரிக்கப்பட்டிருக்கும் சூழலில் மக்கள் மொழி விவகாரங்களில் உணர்வுப்பூர்வமாக இருப்பதை தவிர்க்க முடியாது. அவர்களின் மனதை புண்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. இவ்வாறு நீதிபதி நாகபிரசன்னா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x