Published : 04 Jun 2025 12:35 AM
Last Updated : 04 Jun 2025 12:35 AM

இழப்புகள் முக்கியம் அல்ல; முடிவுகள்தான் முக்கியம்: முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கருத்து

‘‘இழப்புகள் முக்கியம் அல்ல, முடிவுகள்தான் முக்கியம்’’ என ஆபரேஷன் சிந்தூர் குறைபாடுகள் குறித்து முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கருத்து தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் சேதம் அடைந்ததாக பல தகவல்கள் வெளியாயின. எத்தனை போர் விமானங்கள் சேதம் அடைந்தன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் சவுகான் கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘இந்திய விமானப்படையின் 6 விமானங்களை சுட்டு வீழத்தியதாக பாகிஸ்தான் கூறுவது தவறு. சில விமானங்கள் சேதம் அடைந்தன. எத்தனை விமானங்கள் சேதம் அடைந்தன என்பது முக்கியம் அல்ல. கடந்த மே 7-ம் தேதி தாக்குதலுக்கு பின் தவறுகளை சரிசெய்து, மே 10-ம் தேதி அன்று பாகிஸ்தானுக்குள் 300 கி.மீ சென்று விமானப்படை தளங்களை துல்லியமாக தாக்கினோம்.’’ என்றார்.

இந்நிலையில் புனேவில் உள்ள சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் ‘எதிர்கால போர் முறைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புரை நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் கலந்து கொண்டு பேசியதாவது:

தீவிரவாத அச்சுறுத்தல், அணு ஆயுத பிளாக்மெயில்களையெல்லாம் இந்தியா பொறுத்துக் கொள்ளாது. இந்தியாவில் தீவிரவாத செயல்களை பாகிஸ்தான் நடத்தக் கூடாது. தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். அதற்காக மேற்கொள்ளப்பட்டதுதான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை.

போர் என்றால் அதில் அபாயம் இருக்கத்தான் செய்யும். அந்த அபாயத்தை எதிர்கொள்ளாமல் யாரும் வெற்றி பெற முடியாது. மே 7-ம் தேதி நடத்திய ஆரம்ப கட்ட தாக்குதலில் சில இழப்புகள் ஏற்பட்டன. இழப்புகள் முக்கியம் அல்ல. முடிவுகள்தான் முக்கியம். முறையாக செயல்படும் ராணுவப்படைகள் குறைபாடுகள் மற்றும் இழப்புகளால் பாதிக்கப்படுவதில்லை. குறைபாடுகள் இருந்தாலும், மனஉறுதி, ஊக்கம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். தவறு ஏற்பட்டால் அதை புரிந்து கொண்டு, அதை சரி செய்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அச்சம் காரணமாக நீங்கள் அப்படியே இருக்க முடியாது.

தொலைதூரப் பகுதிகளில் உள்ள விமானப்படை தளங்கள் தாக்குதலுக்கு உள்ளானதால், போர் தொடர்ந்தால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என கருதி, பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு முன் வந்தது. நாமும் நீண்ட கால போரை விரும்பவில்லை. கடந்த 2001-ம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் பராகரம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது 9 மாதங்கள் நீடித்தது. அதில் அதிகளவில் செலவுகள், பாதிப்புகள் ஏற்பட்டன. இதே நிலைதான் பாலகோட் தாக்குதலுக்குப் பின்பும் ஏற்பட்டது.

ஆனால் ஆபரேஷன் சிந்தூர் நடிவடிக்கை முடிவடையும் முன்பே, அது நிறுத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடியவில்லை. அது தொடர்கிறது. தாக்குதல் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாம் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். பாகிஸ்தானை பொறுத்தவரை அதிக இழப்புகளை விரைவில் சந்தித்தது. அதனால், போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் முன்வந்ததாக நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x