“ட்ரம்ப் அழைத்தார்... மோடி சரணடைந்தார்!” - ராகுல் காந்தி விமர்சனம்

“ட்ரம்ப் அழைத்தார்... மோடி சரணடைந்தார்!” - ராகுல் காந்தி விமர்சனம்
Updated on
1 min read

போபால்: இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்துப் பேசியதும் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துவிட்டார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் உரையாற்றிய ராகுல் காந்தி, "நாட்டில் தற்போது சித்தாந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் காங்கிரஸும் அரசியலமைப்பும் இணைந்து நிற்கின்றன. மறுபுறம் அரசியலமைப்பை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் உள்ளன. படிப்படியாக இந்தியாவின் அனைத்து நிறுவனங்களையும் அவர்கள் கைப்பற்றி, நாட்டுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறார்கள்.

இரண்டாவது போர் சமூக நீதிக்கானது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நிறைவேற்ற நான் பாடுபடுவேன் என்று மக்களவையில் தேசத்திற்கு உறுதியளித்தேன். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் அவர்கள் மீது கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் போதும், அவர்கள் பயப்படுவார்கள். ட்ரம்ப் போன் செய்து, 'நரேந்திரா, சரணடை' என்று சொன்னபோது அப்படியே செய்ததைப் போல. இது பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் குணம், அவர்கள் எப்போதும் தலைவணங்குகிறார்கள்.

ஆனால், காங்கிரசின் வரலாறு அப்படி அல்ல. அமெரிக்காவின் அச்சுறுத்தலையும் மீறி 1971-இல் இந்தியா பாகிஸ்தானை உடைத்தது. காங்கிரஸின் சிங்கங்கள், வல்லரசுகளுக்கு எதிராகப் போராடுகின்றன. அவர்கள் ஒருபோதும் தலைவணங்குவதில்லை.

அனைத்து சீனப் பொருட்களையும் அதானி இந்தியாவில் விற்கிறார். சீனப் பொருட்கள் மூலம் அதானியும், அம்பானியும் பணம் சம்பாதிக்கிறார்கள். சீனா தனது அனைத்து பொருட்களையும் இந்தியாவில் விற்கிறது. அதானி மற்றும் அம்பானி போன்றவர்களால் இந்தியாவில் ஒரு செல்போன் விற்கப்படும்போது, ஆதனால் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் சீன இளைஞர்களே, இந்திய இளைஞர்கள் அல்ல" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in