Published : 02 Jun 2025 05:00 PM
Last Updated : 02 Jun 2025 05:00 PM
பெங்களூரு: 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் சுமுகமாக வெளியிடப்படுவதை உறுதி செய்வதற்கு உரிய பாதுகாப்பு கோரி நடிகர் கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற 'தக் லைஃப்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், 'தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது' என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்புகள் பெலகாவி, மைசூர், பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. தனது கருத்துக்காக கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்கத் தவறினால், ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்படுவதைத் தடுப்போம் என்றும் அவர்கள் மிரட்டினர்.
இதனிடையே, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலு, "கன்னட அமைப்புகளின் கோரிக்கையின்படி நடிகர் கமல்ஹாசன் 24 மணி நேரத்துக்குள் தனது பேச்சுக்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கப்பட மாட்டாது. மன்னிப்பு கேட்காவிட்டால் நிச்சயம் 100% அந்த படம் திரையிடப்படாது" என தெரிவித்துள்ளார்.
அதேபோல், “கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. கன்னட மொழிக்கு எதிரான சிறு கருத்தையும் எங்களால் ஏற்க முடியாது. கமல்ஹாசன் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் அவர் நடித்த அனைத்து திரைப்படங்களையும் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்” என்று கன்னட கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்களிடையே ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை ஏற்படுத்தும் வகையில் பேசிய நடிகர் கமலின் கருத்து திரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் படம் திரையிடப்படுவதைத் தடுக்கவோ அல்லது தடை செய்யவோ எந்தவொரு தனிநபர், குழு அல்லது அதிகாரத்தையும் தடை செய்ய உத்தரவிட வேண்டும். திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அச்சுறுத்தல்கள் அல்லது இடையூறுகளிலிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “இதை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம். நாம் அனைவரும் அண்டை மாநிலங்கள். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்து ஒன்றாக வாழ வேண்டும். நமது தண்ணீர் தமிழ்நாட்டுக்கு செல்கிறது, தமிழக மக்கள் இங்கு வருகிறார்கள். நாம் எதிரிகள் அல்ல; நாம் அனைவரும் நண்பர்கள். அந்தப் பிரச்சினையின் வரலாறு குறித்து எனக்குத் தெரியாததால், அதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT