ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் சசி தரூர், சல்மான் குர்ஷித் கருத்துக்கு மணீஷ் திவாரி ஆதரவு

மணீஷ் திவாரி
மணீஷ் திவாரி
Updated on
1 min read

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், சல்மான் குர்ஷித் வரிசையில் தற்போது மணீஷ் திவாரியும் இணைந்துள்ளார். இது, மத்திய அரசை ஏற்கெனவே விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இந்திய சமூகத்தினரிடையே பேசியதாவது:

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தவில்லை என்றால் இதைவிட மிகவும் ஆக்ரோஷமான பதிலடி இந்தியாவிலிருந்து கொடுக்கப்படும். பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலை எத்தியோப்பியா கண்டித்துள்ளதுடன் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியா எடுத்துள்ள சுய பாதுகாப்பு நடவடிக்கையை எத்தியோப்பியா மிகவும் பாராட்டியுள்ளது. எத்தியோப்பிய மக்களுடன் எங்களுக்குள்ள உறவு வலுவாகவும் நட்பாகவும் இருந்து வருகிறது. இந்தியாவின் சுயமரியாதையைப் பொறுத்தவரை, நாம் அனைவரும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். இவ்வாறு மணிஷ் திவாரி பேசினார்.

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர், சல்மான் குர்ஷித் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது மணீஷ் திவாரியும் மத்திய அரசை புகழும் வகையில் பேசியுள்ளார்.

ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாளும் நிலையில் இவர்களின் இந்த கருத்து அந்த கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசு நாட்டை தவறாக வழிநடத்துவதாகவும், ராணுவ நடவடிக்கைகளின்போது விமான இழப்பை பாதுகாப்பு படைத் தலைவர் உறுதிப்படுத்திய பின்பு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வலியுறுத்த உள்ளதாகவும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்கெனவே தெரிவித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in