மத நிகழ்ச்சியில் பங்கேற்காத ராணுவ அதிகாரி பணி நீக்கத்தை உறுதி செய்தது நீதிமன்றம்

மத நிகழ்ச்சியில் பங்கேற்காத ராணுவ அதிகாரி பணி நீக்கத்தை உறுதி செய்தது நீதிமன்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்த ராணுவ அதிகாரியின் பணி நீக்கத்தை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ராணுவத்தில் கடந்த 2017-ம் ஆண்டு லெப்டினன்ட்டாக பணியில் சேர்ந்தவர் சாமுவேல் கமலேசன். இவர் சீக்கியர் படைப்பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்தப் படைப்பிரிவினர் தங்கியிருக்கும் முகாமில் கோயில் ஒன்றும், குருதுவாரா ஒன்றும் இருந்தது. இங்கு வீரர்கள் பங்கேற்கும் வழிபாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சாமுவேல் கமலேசன் மறுப்பு தெரிவித்தார். தான் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர் என்றும், சீக்கியர் படைப்பிரிவு முகாமில் தேவாலயம் மற்றும் அனைத்து மதத்தினரும் வழிபாடு நடத்தும் சர்வ தர்ம ஸ்தலம் போன்றவை இல்லை என எதிர்ப்பு தெரிவித்தார்.

இவருக்கு பல கவுன்சலிங் நிகழ்ச்சிகளுக்கும் ராணுவம் ஏற்பாடு செய்தது. ஆனால் லெப்டினன்ட் சாமுவேல் கமலேசன் பிடிவாதமாக இருந்ததால் அவர் ராணுவ ஒழுங்கு விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் சலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 30-ம் தேதி அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

நமது ராணுவத்தில் அனைத்து மதத்தினரும், சாதியினரும் உள்ளனர். அவர் தங்கள் சீருடையால் ஒன்று பட்டவர்கள். மதத்தாலோ, சாதியாலோ வேறுபட்டவர்கள் அல்ல. ராணுவத்தில் மதம் மற்றும் மண்டலத்தின் பெயருடன் சீக்கியர், ஜாத், ராஜ்புத் போன்ற பல படைப்பிரிவுகள் பாரம்பரியமாக உள்ளன. ஆனாலும், இந்தப்பிரிவில் நியமிக்கப்படும் நபர்களின் மதச்சார்பற்ற கொள்கைகளை குறைத்து மதிப்பிடுவதில்லை.

ராணுவத்தில் பணியாற்றும் நபர்களின் மத நம்பிக்கைகளுக்கும் உரிய மரியாதையை ராணுவம் அளிக்கிறது. ஆனால், தனது மேல் அதிகாரியின் உத்தரவுக்கு மேலாக தனது மதத்துக்கு சாமுவேல் கமலேசன் முக்கியத்துவம் அளிக்கிறார். இது ஒழுங்கீனம் என்பது தெளிவாக தெரிகிறது.

பாதுகாப்பு படைக்கு தேவையான ஒழுங்கு, மதச்சார்பற்றதன்மை அவரிடம் இல்லை. இவரது ஒழுங்கீனமான நடவடிக்கை, இந்திய ராணுவத்தின் மதச்சார்பற்ற விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. இது ராணுவ படைப்பிரிவில் அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவினருக்கு இடையேயான பாரம்பரிய நட்புறவை கடுமையாக பாதிக்கிறது. அவரது பதவிநீக்கம் சரியானதுதான். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in