ஆபரேஷன் சிந்தூர் தொடக்கத்தில் இழப்பை சந்தித்த பின் உத்தியை மாற்றினோம்: முப்படை தலைமை தளபதி தகவல்

ஆபரேஷன் சிந்தூர் தொடக்கத்தில் இழப்பை சந்தித்த பின் உத்தியை மாற்றினோம்: முப்படை தலைமை தளபதி தகவல்
Updated on
1 min read

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் தொடக்கத்தில் இழப்புகளை சந்தித்த பின் உத்தியை மாற்றிக்கொண்டதாக முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கூறினார்.

முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் சிங்கப்பூரில் பாதுகாப்பு தொடர்பான ஷாங்கிரி-லா உரையாடலில் பங்கேற்றார். ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் 6 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுவது கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அளித்த பதிலில், “இந்தியா 6 போர் விமானங்களை இழந்ததாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் தவறு. அவை ஏன் வீழ்த்தப்பட்டன, என்ன தவறு செய்யப்பட்டது என்பதுதான் முக்கியம்.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால் நமது உத்தியில் உள்ள தவறை புரிந்துகொள்ள இது உதவியது. இத்தவறுகளை சரிசெய்து அடுத்த 2 நாட்களில் நீண்டதூர இலக்குகளை குறிவைத்து நமது போர் விமானங்களை பறக்கவிட்டோம். இலக்குகளை வெற்றிகரமாக தாக்கி அழித்தோம்" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமான நட்பு கொண்டிருந்தாலும், மோதலின் போது பெய்ஜிங்கிலிருந்து எந்த உண்மையான உதவியும் அதற்கு கிடைக்கவில்லை. ஏப்ரல் 22-ம் தேதி முதல் நமது வடக்கு எல்லைகளில் எந்த அசாதாரண நடவடிக்கையையும் நாங்கள் காணவில்லை. பொதுவாக விஷயங்கள் சரியாக இருந்தன.

போர் நிறுத்தப்பட்டிருந்தாலும், பாகிஸ்தானில் இருந்து ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தால் துல்லியமாகவும் தீர்க்கமாகவும் பதிலளிப்போம். இவ்வாறு அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in