சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது அசாம் அரசு

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது அசாம் அரசு
Updated on
1 min read

வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் பணியை அசாம் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சட்விரோத வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டவர்கள் எல்லாம் இந்தியா - வங்கேதசத்துக்கு இடையேயுள்ள உரிமை கோரப்படாத பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் சட்டவிரோத வெளிநாட்டினர் என தீர்ப்பாயத்தில் அறிவிக்கப்பட்ட 49 பேரை கடந்த 27 மற்றும் 29-ம் தேதிகளில் அசாம் அரசு வெளியேற்றியது. அவர்கள் இந்தியா மற்றும் வங்கதேச இடையே உள்ள உரிமை கோரப்படாத பகுதிக்கு தள்ளப்பட்டனர்.

இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: சட்டவிரோத வெளிநாட்டினர் என தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யவில்லை என்றால், அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த சில ஆண்டுகளாக 30,000 பேரை சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் என பல தீர்ப்பாயங்கள் அறிவித்துள்ளன. அவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை கண்டறிந்து வெளியேற்றும் பணியை நாங்கள் விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.

தேசிய குடிமக்கள் பதிவேடு பணி புதுப்பிக்கப்படுவதால் இப்பணி தடைபட்டது. சட்டவிரோத வெளிநாட்டினர் அடையாளம் காணப்பட்ட பின்பு அவர்கள் சட்டப்படி வெளியேற்றும் பணியை தொடங்குவோம். வரும் நாட்களில் இந்தப் பணி தீவிரமடையும். சட்டவிரோத குடியேறிகள் என அறிவிக்கப்பட்டவர்கள், உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ மேல் முறையீடு செய்ய விருப்பவில்லை என்றால், அவர்கள் இந்தியாவில் தங்குவதற்கான உரிமை இல்லை. தீர்ப்பாயங்கள் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிமன்றங்கள் தடை விதித்திருந்தால், அது போன்ற நபர்களை மட்டும் இங்கு தங்கியிருக்க நாங்கள் அனுமதிக்கிறோம்.

சட்டவிரோத குடியேறிகளில் இரண்டு பிரிவினர் உள்ளனர். சமீபத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் மற்றும், தீர்ப்பாயத்தால் சட்டவிரோத குடியேறிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் என இரு பிரிவினர் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, மேகாலயா எல்லை அருகே கண்டுபிடிக்கப்பட்ட 35 சட்டவிரோத குடியேறிகள் உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டனர்’’ என்றார்.

சட்டவிரோத குடியேறிகள் என அறிவிக்கப்பட்டவர்களை அசாம் போலீஸார் கைது செய்து திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்களை எங்கு வைத்துள்ளனர் என்ற விவரங்களை தெரிவிக்க கோரி அவர்களது உறவினர்கள் சிலர் உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றங்களிலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in