பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மகாராஷ்டிர இன்ஜினீயர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மகாராஷ்டிர இன்ஜினீயர் கைது
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்ததாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த தானேவிலுள்ள கல்வா பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர முரளிதர் வர்மா(27). மத்திய பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான ராணுவ தொழில்நட்ப நிறுவனம் ஒன்றில் ஜூனியர் இன்ஜினீயராக ரவீந்திர முரளிதர் வர்மா பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு தெற்கு மும்பையில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான கப்பல் துறைக்குள் நுழைவதற்கான மத்திய அரசின் அனுமதி இருந்தது. மேலும் அவர் கடற்படை கப்பல்களிலும் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் முரளிதர் வர்மாவை, பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் `ஹனி டிராப்’ வலையில் சிக்கவைத்தனர். இதன்மூலம் அவரிடமிருந்து தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறையினர் பெற்று வந்தனர். முரளிதர் வர்மாவை ஹனி டிராப்பில் சிக்கவைப்பதற்காக உளவுத்துறையினர் சதித்திட்டம் தீட்டி, பேஸ்புக் சமூக வலைதளம் மூலம் அவருடன், பெண்ணை போல நடித்து பேச்சு கொடுத்தனர். இதை நம்பிய முரளிதர் வர்மா, அவர்களது வலையில் விழுந்து பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்களைத் தெரிவித்து வந்துள்ளார்.

கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் முதல் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பல்வேறு முக்கியமான தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு கசியவிட்டுள்ளார் முரளிதர் வர்மா.

இந்நிலையில் இது தொடர்பாக தகவல்களைப் பெற்ற தானேவிலுள்ள தீவிரவாத தடுப்புப் படையினர் அவரை 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

அவரிடமிருந்து செல்போன் உள்ளிட்ட சாதனைகளை தீவிரவாத தடுப்புப் படையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in