Last Updated : 31 May, 2025 05:12 PM

 

Published : 31 May 2025 05:12 PM
Last Updated : 31 May 2025 05:12 PM

வேலைக்கு நிலம் லஞ்சம் வழக்கு: விசாரணையை நிறுத்தக் கோரிய லாலு பிரசாத்தின் மனு தள்ளுபடி

புது டெல்லி: ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக நிலம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கக் கோரிய முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த வழக்கின் குற்றச்சாட்டு பரிசீலனை கட்டத்தில், லாலு பிரசாத் யாதவ் விசாரணை நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைக்க முழு சுதந்திரம் இருப்பதாக நீதிபதி ரவீந்தர் துதேஜா தீர்ப்பளித்தார். மேலும், வழக்கின் விசாரணையை நிறுத்துவதற்கு எந்த வலுவான காரணங்களும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து, குற்றச்சாட்டு தொடர்பான வாதங்களுக்காக இந்த வழக்கு ஏற்கனவே சிறப்பு நீதிபதியின் முன் பட்டியலிடப்பட்டுள்ளது என்று கூறி லாலு பிரசாத் யாதவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

லாலு பிரசாத் யாதவ், சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தலைமையிலான சட்டக் குழு, லாலு பிரசாத்துக்கு எதிராகத் தேவையான அனுமதியைப் பெறாமல் விசாரணையைத் தொடர்ந்ததாக வாதிட்டது. இந்த வழக்கு தொடக்கத்திலிருந்தே சட்டப்பூர்வ அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை என்று கபில் சிபல் வாதிட்டார். 2004 மற்றும் 2009 க்கு இடையில் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்பதையும், ஏற்கனவே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, 2020 இல் எஃப்ஐஆர் பதிவு செய்ய சிபிஐ முடிவு எடுத்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வழக்கின் விவரம்: கடந்த 2004 - 2009 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் (யுபிஏ -1) முதல் ஆட்சிக்காலத்தில் ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வேயில், குரூப் டி மற்றும் கடைநிலைப்பணிகளில் வேலை வழங்குவதற்கு நிலத்தினை லஞ்சமாக பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற இருக்கிறது.

சிபிஐ-ன் வழக்குப்படி, வேலைக்கு விண்ணப்பித்தவர்கள், ரயில்வே வேலைக்காக நிலத்தினை லஞ்சமாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டதாக முன்பு அமலாக்கத் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

வேலைக்கான நில ஊழல் தொடர்பாக, மே 9 அன்று, முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீது பணமோசடி வழக்கில் வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கினார். முன்னாள் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான முக்கியமான சட்டத் தேவையான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 197(1) (பிஎன்எஸ் 2023 இன் பிரிவு 218) இன் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x