காஷ்மீர் மக்களின் இழப்பை அரசு வேலை ஈடு செய்யாது: அமித் ஷா உருக்கம்

காஷ்மீர் மக்களின் இழப்பை அரசு வேலை ஈடு செய்யாது: அமித் ஷா உருக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட நிவாரண உதவிகள் அவர்களின் இழப்பை ஒருபோதும் ஈடு செய்யாது என்பது எனக்கு தெளிவாக தெரியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பதிலடியை வழங்கியது. இந்த வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லையான பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் கடைசி நாளான நேற்று மத்திய உள்துறை அமைச்சர் பூஞ்ச் பகுதிக்கு சென்று பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அமித் ஷா கூறியதாவது:

பாகிஸ்தான் தாக்குதலில் இங்குள்ள மக்கள் தங்களது குடும்பத்தில் ஒருவரை பறிகொடுத்துள்ளனர். எனவே, அரசு வேலை வாய்ப்பு உள்ளிட்ட எந்தவிதமான நிவாரண உதவிகளும் இங்குள்ள மக்களின் இழப்பை ஒருபோதும் ஈடு செய்யாது என்பது எனக்கு நன்கு தெரியும். மத்திய அரசும், ஜம்மு-காஷ்மீர் அரசும், இந்திய மக்களும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் உறுதியுடன் நிற்கிறார்கள் என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.

தீவிரவாதத்தையும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்பதை பாகிஸ்தான் பிரதமர் ஷொபஸ் ஷெரிபிடம் ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டோம். ரத்தமும், தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய முடியாது. அதற்காகத்தான் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பாகிஸ்தானின் விமான தளங்களை தாக்கி அழித்ததன் மூலம் அவர்களுக்கு புரிய வைத்துள்ளோம். இதன்பிறகே அவர்கள் போர் நிறுத்தத்துக்கு இறங்கி வந்தனர். நமக்கு தீங்கு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வலுவான பதிலடி தரப்படும். இவ்வாறு அமித் ஷா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in