தேசிய பாதுகாப்பு அகாடமியில் 17 பெண்கள் முதல் முறையாக பட்டம் பெற்றனர்

மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்டிஏ) முதல்முறையாக பெண்கள் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து நேற்று பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்றனர். | படம்: பிடிஐ |
மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்டிஏ) முதல்முறையாக பெண்கள் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து நேற்று பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்றனர். | படம்: பிடிஐ |
Updated on
1 min read

புதுடெல்லி: வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக, என்டிஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமியின் 75 ஆண்டுகால செயல்பாட்டில் முதல்முறையாக 17 பெண்கள் பட்டம்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

என்டிஏ-வில் கடுமையான பயிற்சிகளைப் பெற்று ஆண்கள் மட்டுமே பட்டங்களைப் பெற்றுவந்தனர். இந்த நிலையில், பெண்களையும் அந்த அகாடமியில் அனுமதிக்க கோரி கடந்த 2021-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, யுபிஐஎஸ்சி தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயில்வதற்கு முதல் முறையாக பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 2022-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் 300 ஆண்களுடன் சேர்ந்து முதல்முறையாக 17 பெண்களும் படித்து பட்டம் பெற்று வெளியேறி உள்ளனர். ஆணும்-பெண்ணும் சேர்ந்து படித்து பட்டம்பெற்ற முதல் பேட்ச் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பேட்சின் தேர்ச்சியை குறிக்கும் வகையில் கடக்வாஸ்லாவில் உள்ள கேதர்பால் மைதானத்தில் நேற்று அணிவகுப்பு நடைபெற்றது. இதற்கு, முன்னாள் ராணுவத் தளபதியும், தற்போதைய மிசோரம் ஆளுநருமான வி.கே.சிங் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், “அதிகாரமளித்தல் நோக்கிய நமது பயணத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி பயணத்தை இந்த அணிவகுப்பு எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மேலும், பெண்களின் வளர்ச்சியை மட்டுமல்லாமல் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியையும் இது பிரதிபலிக்கிறது" என்றார்.

17 பெண் வீராங்கனைகள் உட்பட மொத்தம் 339 பேருக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் 84 பேருக்கு பிஎஸ்சி, 85 பேருக்கு கணினி அறிவியல், 59 பேர் இளங்கலை (பிஏ), 111 பேருக்கு பிடெக் பட்டங்கள் வழங்கப்பட்டன.

இளங்கலைப் பிரிவில் முதலிடம் பிடித்த டிவிஷன் கேடட் கேப்டன் ஷ்ரிதி தக்ஸ் கூறுகையில், “ என்டிஏ-வில் மூன்று ஆண்டு பயிற்சி உணர்சிகளின் கலவையாக இருந்தது. ஆரம்பத்தில் தயக்கம் இருந்தாலும் பயிற்றுநர்கள், ஊழியர்கள் உதவியுடன் அகாடமியுடன் போகப்போக ஒன்றிவிட்டேன்" என்றார். இவரது தந்தையும் இதே என்டிஏ-வில் பயின்று தேர்ச்சி பெற்றவர். குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்வதாக ஷ்ரிதி பெருமையுடன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in