பேச்சுவார்த்தை வேண்டுமெனில் ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவிடம் பாக். ஒப்படைக்க வேண்டும்: ராஜ்நாத்

பேச்சுவார்த்தை வேண்டுமெனில் ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவிடம் பாக். ஒப்படைக்க வேண்டும்: ராஜ்நாத்
Updated on
1 min read

பனாஜி: பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக இருந்தால், ஹபீஸ் சயீத், மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

கோவா கடற்கரையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இன்று (மே 30) நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையின் அமைதியான சேவை பாராட்டுக்குரியது. பாகிஸ்தான் கடற்படை வெளியேறாமல் இருந்ததை அது உறுதி செய்தது. பாகிஸ்தான் தீய எண்ணத்துடன் செயல்பட முயன்றால், இந்திய கடற்படை மூலம் மத்திய அரசு பதில் அளிக்கும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நேரடித் தாக்குதலாகும்.

சுதந்திரம் அடைந்ததிலிருந்து தான் நடத்தி வரும் பயங்கரவாதம் ஆபத்தான விளையாட்டு என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தற்போது, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஏதேனும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டால், அதன் விளைவுகளை அது ஏதிர்கொண்டு தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். பயங்கரவாத அச்சுறுத்தலை வேரறுக்க இந்தியா தயங்காது. அனைத்து வழிகளையும் அது பயன்படுத்தும்.

பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிராக அனைத்து வகையான நடவடிக்கைகளையும் இந்தியா முழு சுதந்திரத்துடன் மேற்கொள்ளும். பயங்கரவாதத்திலிருந்து தனது மக்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் உரிமையை இன்று உலகம் ஒப்புக்கொள்கிறது. பாகிஸ்தான் தனது மண்ணில் இயங்கும் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும்.

ஹபீஸ் சயீத், மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் இருவரும் இந்தியாவில் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலில் மட்டுமல்ல, ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளாகவும் உள்ளனர். மும்பை தாக்குதல்களில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா அண்மையில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார். அதேபோல், மும்பை தாக்குதல் குற்றவாளி ஹபீஸ் சயீது செய்த குற்றத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.

மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் வலியுறுத்துகிறது. பேச்சுவார்த்தை என ஒன்று இருந்தால், அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாக மட்டுமே இருக்கும். பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக இருந்தால், நீதியை நிலைநாட்ட ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை, அது ஒரு இடைநிறுத்தம் மட்டுமே. பாகிஸ்தான் மீண்டும் அதே தவறைச் செய்தால், இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in