கேரளாவில் கனமழை; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கேரளாவில் கனமழை; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் இடுக்கி, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று சிவப்பு எச்சரிக்கையும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதனால் பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்களின்படி, “கேரளா மற்றும் லட்சத்தீவுப் பகுதியில் அடுத்த 2-3 நாட்களுக்கு கீழ் வெப்பமண்டல மட்டங்களில் வலுவான மேற்கு காற்று தொடர வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால், மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கேரளாவில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல மே 31, ஜூன் 1 மற்றும் 2, 2025 ஆகிய தேதிகளில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கேரளா முழுவதும் பல மாவட்ட நிர்வாகங்கள் இன்று (மே 30 ) தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளன.

கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடிகள், மதரஸாக்கள், கல்வி மையங்கள் மற்றும் சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்தார். அதேபோல எர்ணாகுளம், காசர்கோடு, கோட்டயம், திருச்சூர், இடுக்கி, வயநாடு, பத்தனம்திட்டா, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜி பல்கலைக்கழகம் மே 30 ஆம் தேதி திட்டமிட்ட அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது.

தொடர் மழை மற்றும் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் காரணமாக, ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in