‘ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற்றிருப்பார்’ - ரேவந்த் ரெட்டி

‘ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற்றிருப்பார்’ - ரேவந்த் ரெட்டி
Updated on
1 min read

ஹைதராபாத்: ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திரும்பப் பெற்றிருப்பார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார்.

நிஜாம்பேட்டையில் நடந்த காங்கிரஸின் 'ஜெய் ஹிந்த் யாத்திரை'யில் பங்கேற்று உரையாற்றிய ரேவந்த் ரெட்டி, "போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டவில்லை. பிரதமர் மோடி 1000 ரூபாய் செல்லாத நோட்டு போன்றவர். எனவே இன்று, இந்த நாட்டிற்கு ராகுல் காந்தியின் தலைமை தேவை. ராகுல் காந்தி போன்ற ஒரு தலைவர் இந்த நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், அவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை உத்வேகமாக எடுத்துக் கொண்டு, காளியின் வழியில் நடந்து, பாகிஸ்தானை இரண்டு பகுதிகளாக ஆக்கி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீண்டும் கைப்பற்றியிருப்பார்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்திரா காந்தியின் பேரன் ராகுல் காந்தி இந்த நாட்டின் பிரதமராக வேண்டும். அவர் பிரதமரானால் மட்டுமே, ஒரு பக்கம் பாகிஸ்தானையும் மறுபுறம் சீனாவையும் தோற்கடித்து நமது சுயமரியாதையை நிலைநாட்டுவார். பாகிஸ்தானை இரண்டு நாடுகளாகப் பிரிப்பதற்கு எனது முழு ஆதரவையும் ஏற்கனவே அறிவித்துள்ளேன்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் மோடி அரசாங்கம் பாகிஸ்தானுடான போரை நிறுத்தியுள்ளது. பிரதமர் மோடி கொண்டு வந்த ரஃபேல் போர் விமானங்கள், எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று எந்த விவாதமும் இல்லை. வேறொரு நாட்டிலிருந்து போர் விமானங்களை வாங்கிய பிரதமர் மோடி, எத்தனை ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்று பதிலளிக்க வேண்டும். உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்கி ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்கினீர்கள், ஆனால், அவை ஏன் அழிக்கப்பட்டன? இதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்” என்று ரேவந்த் ரெட்டி கேள்வியெழுப்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in