Published : 30 May 2025 07:32 AM
Last Updated : 30 May 2025 07:32 AM
புதுடெல்லி: ‘‘தேஜஸ் போர் விமானம் உட்பட ராணுவ தளவாட கொள்முதலில், ஒரு ஒப்பந்தமும் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படுவதில்லை’’ என சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பேசிய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் வேதனை தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியது. தீவிரவாத முகாம்களையும், பாக். விமானப்படை தளங்கள் மீதும் இந்திய போர் விமானங்கள் குண்டு வீசின. இந்தியா மீதான தாக்குதலையும், வான் பாதுகாப்பு படைப் பிரிவுகள் வெற்றிகரமாக முறியடித்தன.
இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) ஆண்டு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் விமானப்படை தளபதி ஏ.பி.சிங் கலந்து கொண்டு பேசியதாவது:
ராணுவத் தளவாட கொள்முதல்கள் குறித்த நேரத்தில் நிறைவேற்றப்படாமல் இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. உள்நாட்டு தயாரிப்புகள் உட்பட ஒரு ஒப்பந்தத்தில் கூட குறித்த காலத்தில் ராணுவத் தளவாடங்கள் விநியோகிக்கப்பட்டதாக எனக்கு நினைவில்லை. இது குறித்து நாம் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.
குறித்த காலத்தில் விநியோகம் செய்ய முடியாதது குறித்து நாம் ஏன் உறுதிமொழி அளிக்க வேண்டும். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதெல்லாம், அதில் குறிப்பிட்டுள்ள காலக்கெடு சாத்தியமில்லை என்பது எங்களுக்கு தெரியும். இருந்தாலும், வேறுவழியின்றி நாங்கள் கையெழுத்திடுகிறோம்.
எச்ஏஎல் நிறுவனத்திடம் 83 தேஜஸ் எம்கே1ஏ விமானங்கள் வாங்க கடந்த 2021-ம் ஆண்டில் ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்தோம். இதன் விநியோகம் கடந்தாண்டு மார்ச்சில் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை ஒரு விமானம் கூட விநியோகிக்கப்படவில்லை.
அதேபோல் தேஜஸ் எம்கே2 மாதிரி விமானமும் இன்னும் வெளிவரவில்லை. ரேடாரில் சிக்காத ஏஎம்சிஏ போர் விமானத்தின் மாதிரியும் இன்னும் தயாரிக்கப்படவில்லை. இதுபோன்ற தாமதங்கள் போருக்கு தயார் நிலையில் இருப்பதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு விமானப்படை தளபதி ஏ.பி.சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT