போக்சோ வழக்கிலிருந்து விடுவிப்பு: 100 கார், 10,000 ஆதரவாளர்களுடன் பாஜக முன்னாள் எம்.பி. வெற்றி வலம்

பிரிஜ் பூஷண் சிங்
பிரிஜ் பூஷண் சிங்
Updated on
1 min read

அயோத்தி: போக்சோ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 100 எஸ்யுவி கார்கள், 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் வெற்றி வலம் வந்தார். பாஜக மூத்த தலைவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமாக இருந்தவர் பிரிஜ் பூஷண் சிங்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷண் இருந்த காலத்தில், பல பெண் மல்யுத்த வீரர்கள் தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும், பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல வீரங்கணைகள் இரவு பகலாக பல நாட்கள் டெல்லியில் போராடினர்.

மேலும், இவர் மீது மைனர் பெண் ஒருவர், பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்ததால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2023-ல் நீதிமன்றத்தில் ஆஜரான அவர்கள் காவல்துறை அறிக்கைக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. தனது மகள் பொய் கூறிவிட்டதாக மைனர் பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரிஜ் பூஷணுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கைத் தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷண் சிங், நேற்று அயோத்தியில் 100 எஸ்யுவி கார்கள், 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் வெற்றி வலம் வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். நகர் முழுவதும் கார்களில் வலம் வந்து, வழக்கிலிருந்து விடுதலையானதை அவர் கொண்டாடினார். அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அப்போது பிரிஜ் பூஷண் சிங் கூறும்போது, “என் மீது பொய்யான புகார்களை சுமத்தினர். ஆனால், சட்டத்தின் மீது, நீதியின் மீதும் நான் நம்பிக்கை வைத்திருந்தேன். எனது நம்பிக்கை ஒருநாளும் பொய்க்காது என்று நம்பினேன். அதற்கு இப்போது பலன் கிடைத்துவிட்டது. உண்மை வென்றுவிட்டது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

நான் அனுமன் மீது உண்மையான பக்தியை உடையவன். அவர் மீது பாரத்தைப் போட்டு விட்டு வழக்கு விசாரணையில் பங்கேற்றேன். தற்போது விடுதலை அடைந்துவிட்டேன்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in