கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு
Updated on
2 min read

பெங்களூரு: கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிடில் 'தக் லைஃப்' படத்துக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்தார்.

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள‌ தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார்.

விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், ''கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்" என தெரிவித்தார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சலுவளி உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த தக் லைஃப் படத்தின் விளம்பர பதாகைகளை கிழித்து எறிந்தனர். சமூக வலைதளங்களில் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும், கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க‌க் கூடாது எனவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறுகையில், "கமல்ஹாசன் ஒன்றும் வரலாற்றாசிரியர் இல்லை. அவர் எந்த மொழியில் இருந்து எந்த மொழி பிறந்தது என கூற முடியாது. அவரது பேச்சின் காரணமாக 6.5 கோடி கன்னடர்களின் மனம் புண்பட்டுள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தென்னிந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறும் கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இந்து மதத்தை அவமதித்து வருகிறார். தனது படங்கள் வாயிலாக இந்துக்களின் மனதையும் காயப்படுத்தி வருகிறார். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. கன்னடர்கள் தங்களின் நிலம், மொழி, மக்கள், நீர் ஆகியவற்றை ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்கள் என்பதை கமல்ஹாசனுக்கு நினைவூட்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''கமல்ஹாசன் பாவம். அவருக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியவில்லை'' என விமர்சித்துள்ளார். இதனிடையே கன்னட கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ''கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்து தேவையற்றது. கன்னட மக்கள் இதுபோன்ற கருத்துக்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அவர் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், கர்நாடகாவில் அவரின் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்படும். இதுதொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுத இருக்கிறேன்'' என தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று கமல்ஹாசனிடம் கேரளாவில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அத‌ற்கு அவர், ''அரசியல்வாதிகள் மொழி குறித்து கருத்து சொல்வதற்கு தகுதியற்றவர்கள். மொழியியல் அறிஞர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் அதுபற்றி கருத்து சொல்லட்டும்.

தமிழகத்தில் எனக்கு நெருக்கடி வந்தபோது, கன்னடர்கள் தங்களது ஊருக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். அன்பின் காரணமாகவே நான் அவ்வாறு கூறினேன். அன்பு எப்போதும் மன்னிப்பை எதிர்ப்பார்க்காது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in