கேரளாவில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்: பல இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிப்பு

இடம்: கோட்டயம் | படம்: விஷ்ணு பிரதாப்
இடம்: கோட்டயம் | படம்: விஷ்ணு பிரதாப்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் அடுத்த மூன்று நாட்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது

கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழையின் சீற்றம் இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும் வங்கக்கடலில் செவ்வாய்க்கிழமை (மே 27, 2025) ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கண்ணூர், வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா தவிர மீதமுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது. சிவப்பு மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மிக அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை( மே.28) கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள்( மே.29) பத்தனம் திட்டா, இடுக்கி, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கும், மே 30-ம் தேதி பத்தனம் திட்டா, இடுக்கி, கண்ணூர், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பெய்த மழையில் மரங்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் ரயில் தண்டவாளங்களில் விழுந்ததால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரயில் போக்குவரத்து தடைபட்டது.

கோழிக்கோட்டில் உள்ள நல்லளம்-அரிக்காடு ரயில் பாதையில் மரங்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் விழுந்ததால் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வடக்கு கேரளாவுக்குச் செல்லும் மற்றும் வரும் பல ரயில்களின் சேவைகள் தாமதமாகின. எர்ணாகுளம் பகுதியில் அம்பட்டு காவில் மெட்ரோ நிலையம் அருகே ரயில் பாதையில் மரம் விழுந்ததால், ரயில் போக்குவரத்து சுமார் நான்கு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கண்ணூரில் உள்ள தலசேரி மற்றும் அய்யன்குன்னுவில் தலா 17 செ.மீ மழை பெய்தது. அதைத் தொடர்ந்து இடுக்கியில் உள்ள பீர்மேடு மற்றும் வயநாட்டில் உள்ள வைத்திரியில் தலா 16 செ.மீ மழை பெய்துள்ளது.

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை பாலக்காடு அருகே உள்ள தென்குரிசியில் பெருக்கெடுத்து ஓடிய ஓடையில் மீன்பிடிக்கச் சென்ற 44 வயது நபர் பலத்த நீரோட்டத்தில் சிக்கி இறந்தார். ஆலப்புழா மாவட்டம் பல்லுருத்தியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் சாலையோரக் கடை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். ஆழப்புழாவில் 62 வயது நபர் ஒருவர் நீர்நிலையில் மூழ்கி உயிரிழந்தார். அதேபோல கொல்லத்தில், ரப்பர் மரக்கிளை முறிந்து விழுந்ததில் 55 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in