பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்த டெல்லி நீதிமன்றம்!

பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்த டெல்லி நீதிமன்றம்!
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். காவல் துறையின் பரிந்துரையின் பேரில் நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீஸாரின் பிஆர்ஓ, “மைனர் மல்யுத்த வீராங்கனை அளித்த புகாருக்கு உறுதியான ஆதாரம் இல்லை. அவரும் அவரது தந்தையும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அறிக்கை அளித்துள்ளோம். இதனால் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம்” என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது அந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தந்தையும் இந்த வழக்கில் காவல் துறை அறிக்கைக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இதை தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு விளக்கங்களை கேட்ட நீதிமன்றம், இன்று (மே 26) போக்சோ வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து தனது தந்தை மீதான இதர பாலியல் குற்றச்சாட்டுகளும் பொய் என்பதை சட்டத்தின் முன் நிரூபிக்கப்படும் என பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மகன் பிரதீக் தெரிவித்துள்ளார். இதை எக்ஸ் தள பதிவு மூலம் கூறியுள்ளார்.

கடந்த 2023-ல் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 6 மல்யுத்த வீராங்கனைகளும், ஒரு மைனர் வீராங்கனையும் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது உலக அளவில் கவனம் பெற்றது.

தொடர்ந்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி போலீஸார் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது இரு எப்ஐஆர் பதிவு செய்தனர். அதில் ஒன்று போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது. மற்றொன்று பாலியல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in