Published : 26 May 2025 02:38 PM
Last Updated : 26 May 2025 02:38 PM
புதுடெல்லி: இந்தியாவில் இன்றைய நிலவரப்படி (மே 26, 2025) மொத்தம் 1,009 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மே 19 அன்று இந்த எண்ணிக்கை 257 ஆக இருந்தது. கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள தகவல்களின்படி, கோவிட் 19 மாறுபாடுகளான என்பி.1.8.1 (NB.1.8.1) மற்றும் எல்எப்.7 (LF.7) ஆகியவை சமீபத்தில் இந்தியாவில் கண்டறியப்பட்டன. ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் என்பி.1.8.1 மாறுபாட்டால் ஒருவர் பாதிக்கப்பட்டார். அதே நேரத்தில் மே மாதத்தில் எல்எப்.7 மாறுபாட்டால் நான்கு பேர் பாதிக்கப்பட்டனர்.
உலக சுகாதார அமைப்பு எல்எப்.7மற்றும் என்பி.1.8.1 துணை மாறுபாடுகளை கண்காணிப்பின் கீழ் உள்ள மாறுபாடுகள் (VUMs) என வகைப்படுத்தியுள்ளது. இவை கவலைக்குரிய மாறுபாடுகள் (VOCs) அல்லது கவனத்துக்குரிய மாறுபாடுகள் (VOIs) அல்ல என தெரிவித்துள்ளன. சீனா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் கோவிட் 19 பாதிப்பு சமீபத்தில் அதிகரிப்பதற்கு இந்த மாறுபாடுகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த வார இறுதியில் சுகாதார அமைச்சகம் கரோனா பாதிப்புகளை மதிப்பாய்வு செய்து, முக்கியமாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து பாதிப்பு அதிகம் பதிவாகியுள்ளதாகக் கூறியது. தற்போது இந்தியா முழுவதும் 1,009 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 430 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கேரளாவில் மே 19 முதல் 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் தற்போது 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 153 பேர் கடந்த வாரம் முதல் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த வாரத்தில் நான்கு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். டெல்லியில் தற்போது பாதிப்பு 104 ஆக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, கடந்த வாரத்தில் 752 பேர் புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 305 பேர் குணமடைந்துள்ளனர். “முன்னர் பரவிய மாறுபாடுகளுடன் ஒப்பிடும்போது, தற்போது பரவும் மாறுபாடுகள் அதிகமாக பரவக்கூடியவை அல்லது கடுமையான நோயை ஏற்படுத்துகின்றன என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மத்திய சுகாதார அமைச்சகம் விழிப்புடன் உள்ளது, தற்போதைய நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT