

புதுடெல்லி: காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தானுக்கு வழங்க வழிவகுத்த முடிவுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், அவரது தந்தை ஜவஹர்லால் நேருவுமே பொறுப்பு என்று குற்றம் சாட்டி, அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு 1963 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட தந்தியை பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே மேற்கோள் காட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “1948-ம் ஆண்டு பாகிஸ்தான் காஷ்மீரை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பிறகு, இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியும், அவரது தந்தை நேருவும் அதிகாரத்தில் இருந்தபோது மீண்டும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் மத்தியஸ்த அழுத்தத்தின் கீழ், 1962 மற்றும் 1964-க்கு இடையில் இந்திய அரசாங்கத்தின் அமைச்சர் ஸ்வரன் சிங்குக்கும், பாகிஸ்தானின் சுல்பிகர் அலி பூட்டோவுக்கும் இடையே தொடர்ச்சியான சந்திப்புகள் நடைபெற்றன.
இந்த ஆய்வறிக்கையை கவனமாகப் படியுங்கள், பூஞ்ச் மற்றும் உரியில் பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்த பகுதியை பாகிஸ்தானுக்குத் திருப்பித் தர இந்தியா அப்போது முடிவு செய்திருந்தது. விஷயம் இத்துடன் நிற்கவில்லை; குரேஸில் உள்ள நீலம் மற்றும் கிஷன்கங்கா பள்ளத்தாக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டுடன் சர்வதேச எல்லையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இன்றைய இந்தியாவின் பிரச்சினைகளுக்கு ஒரே காரணம் காங்கிரஸின் கைதான்" என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் இதுகுறித்து ஆவணங்களாக சிலவற்றையும் அவர் இணைத்துள்ளார்.
அவர் பகிர்ந்த பிப்ரவரி 9, 1963 தேதியிட்ட ஆவணம், இந்திய வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங்குக்கும் பாகிஸ்தானின் சுல்பிகர் அலி பூட்டோவுக்கும் இடையே பனிப்போர் புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் மத்தியஸ்தத்தின் கீழ் நடைபெற்ற விவாதங்களை விவரிக்கிறது. துபேயின் கூற்றுப்படி, கராச்சியிலிருந்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட தந்தியில், பூஞ்ச், உரி மற்றும் கிஷன்கங்கா பள்ளத்தாக்கு போன்ற காஷ்மீரின் பகுதிகளை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுப்பது குறித்து இந்தியா பரிசீலித்தது என்று கூறியுள்ளார்.
முன்னதாக சனிக்கிழமையன்று, 1965 இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்ற போதிலும், ரான் ஆஃப் கட்ச்சின் 828 சதுர கிலோமீட்டர் பரப்பளவை இந்தியா பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க வழிவகுத்த 1968 ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கை துபே விமர்சித்தார்.
இந்திரா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அப்போது சர்வதேச நடுவர் மன்றத்துக்கு ஒப்புக் கொண்டதாகவும், இதன் விளைவாக இந்தியா, பாகிஸ்தானுக்கு அந்தப் பிரதேசத்தை இழந்ததாகவும் துபே குற்றம் சாட்டினார். 1965 போரில் வெற்றி பெற்ற போதிலும், பயம் காரணமாக பாகிஸ்தானுக்கு நிலத்தை விட்டுக்கொடுத்த இந்திரா காந்தியை ‘இரும்புப் பெண்மணி’ என்று அவர் விமர்சித்துள்ளார்.