காதலியுடன்​ படம்​ வெளியானதால்​ நடவடிக்கை: மூத்த மகனை கட்சியிலிருந்து நீக்கினார்​ லாலு

​காதலி​யுடன்​ தேஜ் பிர​தாப்​
​காதலி​யுடன்​ தேஜ் பிர​தாப்​
Updated on
1 min read

பாட்​​னா: தேஜ் பிரதாப் யாதவ் தனது காதலியுடன் இருக்கும் படம் முகநூலில் வெளியானதை அடுத்து, அவரை ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் 6 ஆண்டுகள் நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்(37). இவருக்கும் பிஹார் முன்னாள் முதல்வர் தரோகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் அவமதிப்பதாக கூறி ஐஸ்வர்யா ராய் தேஜ் பிரதாப் யாதவை விட்டு பிரிந்து சென்றார்.

இந்நிலையலை் தேஜ் பிரதாப் முகநூல் பக்கத்தில் நேற்று ஒரு படம் வெளியானது. அதில் தேஜ் பிரதாப் ஒரு பெண்ணுடன் உள்ளார். அதில், ‘‘ என்னுடன் இருக்கும் இந்தப் பெண் எனது தோழி அனுஷ்கா யாதவ். நாங்கள் 12 ஆண்டுகளாக உறவில் உள்ளோம்’’ என தெரிவித்திருந்தார்.

இந்த படம் வைரலாக பரவியதை அடுத்து தேஜ் பிரதாப் யாதவை 6 ஆண்டுகள் கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் நீக்குவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளை தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் லாலு பிரசாத் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ எனது மூத்த மகனின் செயல்பாடுகள், நடத்தை, பொறுப்பற்ற செயல் ஆகியவை எனது குடும்பத்தின் மதிப்புகளுக்கும், பாரம்பரியத்துக்கு ஏற்ற வகையில் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிக்காதது, சமூக நீதிக்கான நமது போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது. ஆகையால், தேஜ் பிரதாப் யாதவை, கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் நீக்குகிறேன். இனிமேல் அவருக்கும், கட்சியிலும், குடும்பத்திலும் எந்த பங்கும் இல்லை. 6 ஆண்டுகளுக்கு அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்’’ என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தேஜ் பிரதாப் யாதவ் எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ எனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனது குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக, எனது புகைப்படம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனது ஆதரவாளர்கள் இந்த வதந்தியில் கவனம் செலுத்த வேண்டாம்’’ என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in