மின் கம்பி உரசி மூங்கில் எரிந்து சாம்பல்: விவசாயிக்கு ரூ.10 லட்சம்​ இழப்பீடு - மின்​ ஊழியர்களுக்கு உத்தரவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

​மும்​பை: மூங்கில் பயிர் சேதமடைந்த விவகாரத்தில் விவசாயிக்கு மின் நிறுவன ஊழியர்கள் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 68 வயது விவசாயி, தனது நிலத்தில் 5,000 மூங்கில் மரங்களை நட்டு வளர்த்துள்ளார். அந்த மூங்கில்கள் விற்பனைக்கு வர பாதி காய்ந்திருந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 22-ல் அந்த நிலத்துக்கு மேலே சென்ற மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனத்துக்கு (எம்எஸ்இடிசிஎல்) சொந்தமான இரண்டு உயர் மின்னழுத்த கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் மூங்கில்கள் முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

இதுகுறித்து விவசாயி புகார் அளித்ததைத் தொடர்ந்து, வனத்துறை அமைச்சகம் ரூ.10.27 லட்சத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்து அந்த அறிக்கையை எம்எஸ்இடிசிஎல் நிறுவனத்திடம் அளித்தது. ஆனால், அந்த வயதான விவசாயிக்கு ரூ.4.2 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து அந்த விவசாயி நாக்பூரில் உள்ள நுகர்வோர் ஆணையத்தில் முறையீடு செய்தார்.

விசாரணையின்போது மாநில மின்சார நிறுவனம் மின்சார வழித்தடத்தை சரியாக பராமரிக்காத காரணத்தால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதை நுகர்வோர் ஆணையம் உறுதி செய்தது. இதையடுத்து, எம்எஸ்இடிசிஎல் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் மூன்று பேர் மற்றும் மண்டல இயக்குநர் ஆகியோர் சேர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ரூ.10.27 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் திருப்பித் தரவேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், விவசாயிக்கு மனம் மற்றும் உடல் ரீதியாக ஏற்பட்ட துன்பதுக்காக ரூ.40,000, வழக்கு செலவாக ரூ.10,000-த்தையும் கூடுதலாக வழங்குமாறு மகாராஷ்டிர மாநில மின் நிறுவன ஊழியர்களுக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in