பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்

பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் தாக்குதலில் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. அங்கு பலரது வீடுகள் சேதம் அடைந்தன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு பயணம் செய்தார். பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். “ஆபத்து மற்றும் அச்சுறுத்தலான சூழலை பார்த்திருக்கிறீர்கள். கவலைப்பட வேண்டாம், விரைவில் இயல்பு நிலை திரும்பி விடும்" என அவர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.

குழந்தைகளிடம், “பள்ளியில் நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள், நன்றாக படியுங்கள், நன்றாக விளையாடுங்கள்” என்றார்.

இதையடுத்து ராகுல் காந்தி, பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த ஸ்ரீ குரு சிங் சபா குருத்வாராவுக்கு சென்றார்.

ராகுல் காந்தியின் வருகையை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று முன்தினம் உறுதிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் தலைவர்கள் வந்த சந்திப்பதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பாகிஸ்தான் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உமர் அப்துல்லா அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in