

புதுடெல்லி: கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை 8 நாட்களுக்கு முன்கூட்டியே, இன்று (மே 24) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கத்தைவிட ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கி உள்ளது.
7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: இந்நிலையில், கேரளாவில் இன்று பரவலாக மணிக்கு 40 கிமீ வேக காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, திரிச்சூர், இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: முன்னதாக, கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, கடந்த 3 மணிநேரத்தில் சுமார் 6 கிமீ வேகத்தில் மெதுவாக கிழக்கு நோக்கி நகர்ந்து, இன்று (மே 24) காலையில், தெற்கு கொங்கன் கடற்கரைக்கு அருகே, ரத்னகிரிக்கு வடக்கு - வடமேற்கே சுமார் 30 கிமீ - டபோலிக்கு 70 கிமீ தொலைவில் நிலைகொண்டது. இது தொடர்ந்து கிழக்கு நோக்கி நகர்ந்து, தெற்கு கொங்கன் கடற்கரை மற்றும் ரத்னகிரி மற்றும் டபோலிக்கு இடையே இன்று மதியம் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வெளுத்துவாங்கப் போகும் மழை! இதன்காரணமாக கேரள கடற்கரை மற்றும் தெற்கு கர்நாடகாவின் உள்ளடங்கிய பகுதிகள், கொங்கன் மற்றும் கோவாவில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மே 29-ம் தேதி வரை கர்நாடகாவின் கடற்கரை பகுதிகள், கேரளாவில் கன மழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்திலும் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
2009-க்குப் பின்னர்: கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு, கேரளாவில் மே.23-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன்பின்னர் இந்த ஆண்டு மே மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
1918-ம் ஆண்டு மே.11-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியதுதான், கேரள வரலாற்றிலேயே தென்மேற்கு பருவமழை மிகவும் முன்கூட்டியே தொடங்கியதாக இருக்கிறது. அதேபோல் 1972-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தொடங்கியதுதான் மிகவும் தாமதமான தொடக்கமாக இருக்கிறது.