

புதுடெல்லி: பாகிஸ்தானின் குண்டு வீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரை சந்திக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை (மே 24) ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்குச் செல்கிறார்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது. ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் நடத்திய பீரங்கி தாக்குதலில், அதிகம் பாதிக்கப்பட்டது ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதி ஆகும். இந்த தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சூழலில் பாகிஸ்தான் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரை சந்திக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை (மே 24) அன்று ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு செல்கிறார். பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீருக்கு செல்வது இது இரண்டாவது முறையாகும்
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘சமீபத்திய பாகிஸ்தான் குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை (மே 24, 2025) ஜம்மு பிராந்தியத்தில் உள்ள பூஞ்சிற்கு வருகை தருகிறார்.
முன்னதாக அவர் ஏப்ரல் 25ம் தேதி ஸ்ரீநகருக்குச் சென்று கொடூரமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தவர்களையும், பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரையும் ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வரையும் அவர் சந்தித்தார்" என்று கூறினார்.
சமீபத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை மீண்டும் குறிவைத்த ராகுல் காந்தி, ‘விஸ்வகுரு பலூன் பஞ்சர் ஆன பிறகு’ வெளிநாடுகளுக்கு எம்.பிக்கள் குழுவை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறியிருந்தார்.