Published : 23 May 2025 02:37 PM
Last Updated : 23 May 2025 02:37 PM
புதுடெல்லி: மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்து வரும் வழக்குகளை விசாரிப்பதற்காக, சுரசந்த்பூரில் உள்ள ஒரு செசன்ஸ் நீதிமன்றம் என்ஐஏ சிறப்பு நீதிமன்றமாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய புலனாய்வு முகமை சட்டம் 2008, பிரிவு 11-ல் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு, சுரசந்த்பூர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றத்தினை, தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றமாக நியமிக்கிறது." என்று கூறப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் அதிகாரவரம்பு மணிப்பூர் முழுவதும் நீடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023, மே 3-ம் தேதி தொடங்கிய மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பான மூன்று முக்கிய வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை கையாள்கிறது. ஜிரிபாமில் குழந்தைகள் உட்பட 6 பெண்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு உட்பட பிற வன்முறை வழக்குகளும் இதில் அடங்கும்.
மணிப்பூரில் பிரச்சினையின் தீவிரம் மற்றும் வன்முறை அதிகரித்து வருவதன் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகம், வழக்கு விசாரணைகளை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க முடிவு செய்த பின்பு, தேசிய புலனாய்வு முகமை 2024 நவம்பரில் வழக்கு பதிவு செய்தது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி குகி பழங்குடிகள் மற்றும் மைத்தேயி பிரிவினருக்கு இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த மோதல் கலவரமாக மாறித் தொடர்ந்தது. இந்த இனக்கலவரத்தில் சுமார் 260 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் இடம் மாற்றப்பட்டனர்.
மணிப்பூரில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. பிப்ரவரி 9-ம் தேதி என்.பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 13-ம் தேதி குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT