Published : 23 May 2025 12:36 PM
Last Updated : 23 May 2025 12:36 PM
புதுடெல்லி: டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் ஸ்ரீநகர் சென்றபோது திடீரென வானிலை மாறியதை அடுத்து, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி அனுமதி கோரியுள்ளார். அதற்கு அந்நாடு அனுமதி மறுத்துள்ளது. விமானத்தின் மூக்குப் பகுதியில் சேதம் ஏற்பட்டதைக் கூறியும் பாகிஸ்தான் அனுமதி மறுத்த நிலையில் விமானி சாதுர்யமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நடந்தது என்ன? - கடந்த புதன்கிழமை மாலை இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்றது. விமானம் அமிர்தசரஸ் நகரக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் விமானம் சேதமடைந்தது. இதையடுத்து, விமானத்துக்குள் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டு பயணிகள் அனைவரும் கலக்கமடைந்தனர்.
விமானத்தை பாகிஸ்தான் வான்வெளிக்குள் திருப்ப முடிவெடுத்த விமானி, அதற்காக லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிடம் அனுமதி கோரியுள்ளார். எனினும், இந்திய விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி மறுக்கப்பட்டது.
‘விமானியின் சாதுர்யம்’ - 227 பயணிகளுடன் இருந்த அந்த விமானம், கடுமையான வானிலைக்கு மத்தியில் ஸ்ரீநகரில் மாலை 6.30 மணி அளவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. முன்னதாக, விமானம் ஸ்ரீநகரை நெருங்கியதும், விமானி அவசரநிலையை அறிவித்தார். அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆலங்கட்டி மழை காரணமாக விமானத்தின் மூக்கு பகுதி சேதமடைந்ததை அடுத்து, அவசர பழுதுபார்ப்புக்காக விமானம் நிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மே 21 அன்று டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற விமானம் திடீரென ஏற்பட்ட ஆலங்கட்டி மழையைத் தாண்டி ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. தரையிறங்கியதும் அனைத்து பயணிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானம் தற்போது ஸ்ரீநகரில் தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டவுடன் மீண்டும் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலங்கள் பயணித்த விமானம்: அந்த விமானப் பயணிகளில் டெரெக் ஓ'பிரையன், நதிமுல் ஹக் உட்பட ஐந்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர். பாதுகாப்பாக தரையிறக்கியதற்கு அவர்கள் விமானிக்கு நன்றி தெரிவித்தனர்.
“மரணத்திற்கு அருகில் இருந்த ஒர அனுபவம் இது. என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். மக்கள் அலறினர், பிரார்த்தனை செய்தனர், பீதியடைந்தனர். எங்களை அந்த வழியாக அழைத்துச் சென்ற விமானிக்கு நன்றி. நாங்கள் தரையிறங்கியபோது, விமானத்தின் மூக்கு வெடித்திருப்பதைக் கண்டோம்.” என்று சாகரிகா கோஷ் கூறினார். தரையிறங்கிய பிறகு விமானிக்கு தூதுக்குழு நன்றி தெரிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT