Published : 23 May 2025 07:47 AM
Last Updated : 23 May 2025 07:47 AM
புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் முழுஆதரவு அளித்துள்ளன. தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளிடம் ஆதாரத்துடன் எடுத்துரைக்க சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்டோர் தலைமையில் 7 எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளன.
ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா தலைமையிலான எம்பிக்கள் குழு ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் டகேஷி இவாயாவை நேற்று சந்தித்துப் பேசியது. இதுகுறித்து சஞ்சய் ஜா கூறும்போது, “தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஜப்பான் முழு ஆதரவு அளித்து உள்ளது. இந்தியாவுக்கு துணை நிற்க ஜப்பான் உறுதி அளித்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
சஞ்சய் ஜா தலைமையிலான குழு இந்தோனேசியா, மலேசியா, கொரியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொள்கிறது. சிவசேனா (ஷிண்டே அணி) எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான எம்பிக்கள் குழு ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. அந்த குழுவினர் அபுதாபியில் நேற்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் ஷேக் நயகான் முபாரக், அமீரக ஊடக பிரிவு தலைவர் ஜமால் முகமது ஒபாத் அல் கபி ஆகியோரை சந்தித்து பேசினர்.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கூறும்போது, “அப்பாவி மக்களை கொல்ல முஸ்லிம் மதம் அனுமதிக்கவில்லை. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்” என்று தெரிவித்தனர். ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்பி கூறும்போது, “மும்பை தீவிரவாத தாக்குதல், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் என எல்லை தாண்டிய தீவிரவாதம் தொடர்கதையாக நீடித்து வருகிறது. பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கிறது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிக்குகிறது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு ஐக்கிய அரபு அமீரகம் முழு ஆதரவு அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.
ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு லைபீரியா, காங்கோ, சியேரா லியோனி நாடுகளில் அடுத்தடுத்து பயணம் மேற்கொள்கிறது. ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய எம்பிக்கள் குழுவினர் அந்த நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசிய புகைப்படங்களை இந்திய தூதரகங்கள் வெளியிட்டு உள்ளன.” என்று தெரிவித்துள்ளார். திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு டெல்லியில் இருந்து நேற்று தனது பயணத்தை தொடங்கியது. இந்த குழுஸ்பெயின், கிரீஸ், லாட்வியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT