பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நாகாலாந்து ஐஏஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம்

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நாகாலாந்து ஐஏஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம்
Updated on
1 min read

கோஹிமா: நாகாலாந்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டதை அடுத்து, அவரை பணியிடைநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாகாலாந்து மாநில நிதித்துறையில் செயலாளராக பணியாற்றிய ரெனி வில்பிரட் மீது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களை அவமதித்ததற்கான பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று அம்மாநில தலைமைச் செயலாளர் ஜே ஆலம் வெளியிட்ட பணியிடைநீக்க உத்தரவில் தெரிவித்தார்.

அந்த உத்தரவில், ‘நாகாலாந்து அரசு, 21.05.2025 தேதியிட்ட உத்தரவு எண்.PAR-A/06/2021-AIS இன் படி, 21.05.2025 முதல் ரெனி வில்பிரட், ஐஏஎஸ்-ஐ இடைநீக்கம் செய்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

நாகாலாந்து மாநில மகளிர் ஆணையம் (NSCW) மாநில காவல் தலைமையகத்தில் அவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காவல்துறையினர் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

நாகாலாந்தின் நோக்லாக் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் சம்பந்தப்பட்ட தனித்தனி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இந்த அதிகாரி ஏற்கனவே விசாரணையில் உள்ளார். அங்கு அவர் முன்னர் 2020 முதல் 2021 வரை துணை ஆணையராக பணியாற்றினார்.

பிப்ரவரியில், இந்த அதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பலரை நாகாலாந்து மாநில மகளிர் ஆணையம் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் நாகாலாந்து முதலீட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் ரெனி வில்பிரெட்டின் கீழ் பணிபுரிந்தனர். அங்கு அவர் அந்த ஆணையத்தின் இணைச் செயலாளராக கூடுதல் பொறுப்பை வகித்தார். ஏப்ரல் 4ம் தேதி மாநில அரசு அவரை கூடுதல் பொறுப்பிலிருந்து விடுவித்தது. அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மாநில குற்றப்பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, குற்றச்சாட்டுகளை மேலும் விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தனர்.

தன் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்த ஐஏஎஸ் அதிகாரி, வழக்கு பதிவு செய்யப்பட்ட விதத்தில் மாநில மகளிர் ஆணையம் பாரபட்சமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். புகார்களைப் பதிவு செய்ய ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in