Published : 22 May 2025 03:35 PM
Last Updated : 22 May 2025 03:35 PM
திருவனந்தபுரம்: மே மாதத்தில் கேரளாவில் 182 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத் அமைச்சர் வீணா ஜார்ஜ், “தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருகின்றன. மேலும் கேரளாவிலும் கரோனா அதிகரிப்புக்கான வாய்ப்பு உள்ளது. தீவிரம் அதிகமாக இல்லாவிட்டாலும், தற்காப்பு முக்கியமானது.
இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு நடவடிக்கை குறித்து திட்டமிட மாநில விரைவு பதிலளிப்பு குழுவின் (RRT) உயர்மட்டக் கூட்டம் கூட்டப்பட்டது. அறிகுறி உள்ள நபர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை அதிகரிக்கப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனைகளில் ஆர்டிபிசிஆர் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முகக்கவசங்கள் கிடைப்பதை உறுதி செய்ய மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும்.
சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கடுமையான நோய்கள் உள்ளவர்கள் பொது இடங்களிலும், பயணத்தின் போதும் முகக்கவசம் அணிவது நல்லது. மக்கள் தேவையற்ற மருத்துவமனை வருகைகளைத் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது சோப்பு போட்டு கைகளைக் கழுவுவது நல்லது. எங்கு சிகிச்சை பெற்றாலும், அந்த மருத்துவமனையில் சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும்.
தற்போதைய கோவிட் வகைகள் அதிக அளவில் பரவும் தன்மையை உடையவை என்றாலும், அதன் தீவிரம் அதிகமாக இல்லை. இருப்பினும், இந்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும்” என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார். கேரளாவில் மே மாதத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான 182 பேரில், கோட்டயத்தில் அதிகபட்சமாக 57 பேரும், அதைத் தொடர்ந்து எர்ணாகுளத்தில் 34 பேரும், திருவனந்தபுரத்தில் 30 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT