“முப்படைகள் உருவாக்கிய சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டது” - பிரதமர் மோடி

“முப்படைகள் உருவாக்கிய சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டது” - பிரதமர் மோடி
Updated on
1 min read

பிகானீர்: பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் அவர்களுக்கு பின்னால் இருந்தவர்களுக்கும் கற்பனை செய்ய முடியாத தண்டனை வழங்கப்படும் என்ற தீர்மானத்தை தாங்கள் நிறைவேற்றி இருப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முப்படைகளும் ஒரு சக்கரவியூகத்தை உருவாக்கியதால் பாகிஸ்தான் மண்டியிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தானின் பிகானீர் நகரில் நடைபெற்ற விழாவில், ரூ.26,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “ரூ. 26,000 மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க, ஒரு 'மகாயக்ஞம்' இந்தியாவில் நடந்து வருகிறது. உள்கட்டமைப்பு பணிகளுக்கு முன்பை விட ஆறு மடங்கு அதிக பணம் செலவிடப்படுகிறது.

இன்று, இந்தியா தனது ரயில்வே வலையமைப்பை நவீனமயமாக்கி வருகிறது. வந்தே பாரத், அமிர்த பாரத் மற்றும் நமோ பாரத் ரயில்கள் நாட்டின் புதிய வேகத்தையும் முன்னேற்றத்தையும் குறிக்கின்றன. அகல ரயில் பாதைகளில் ஆளில்லா ரயில்வே கிராசிங் என்பது கடந்த காலமாக மாறிவிட்டது. 1300க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் ஒரே நேரத்தில் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. 100க்கும் மேற்பட்ட அமிர்த பாரத் நிலையங்கள் தயாராக உள்ளன.

ஏப்ரல் 22 அன்று, பஹல்காமில் பயங்கரவாதிகள் நமது சகோதரிகளின் நெற்றியில் இருந்து குங்குமத்தை அழித்தனர். பஹல்காமில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் வலியை 140 கோடி இந்தியர்களும் உணர்ந்தனர். பயங்கரவாதிகள் கற்பனை செய்ய முடியாத தண்டனையை வழங்குவதற்கான தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றினோம்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியா ஒன்றுபட்டுள்ளது. பயங்கரவாதத்தின் மையத்தில் நாங்கள் தாக்குதல் நடத்தினோம். நமது அரசாங்கம் மூன்று படைகளுக்கும் சுதந்திரம் அளித்தது. மூன்று படைகளும் ஒரு சக்கரவியூகத்தை உருவாக்கியதால் பாகிஸ்தான் மண்டியிட்டது.

நமது சகோதரிகளின் குங்குமத்தை அழிக்க புறப்பட்டவர்கள், மண்ணில் புதையுண்டு அழிந்துபோனார்கள். இந்தியாவின் ரத்தம் சிந்தியவர்களின் கணக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இந்தியா மவுனமாக இருக்கும் என்று நினைத்தவர்கள் இன்று புதைந்து கிடக்கிறார்கள்.

ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பயங்கரவாதிகளின் 9 பெரிய மறைவிடங்களை 22 நிமிடங்களில் அழித்தோம். இந்தியாவின் பதில் அதன் எதிரிகளுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பியது. குங்குமம் துப்பாக்கிப் பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை உலகமும், நாட்டின் எதிரிகளும் பார்த்துவிட்டார்கள்" என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in