

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சிங்போரா சத்ரூவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அங்குள்ள கிஷ்த்வார் மாவட்டத்தின் சிங்போரா பகுதியில் உள்ள சத்ரூவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் இந்தத் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
"ஆபரேஷன் ட்ருஷி' என்று பெயரிடப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கையில் துப்பாக்கிச் சண்டை மூண்டதும் கூடுதல் படைகள் நிலைநிறுத்தப்பட்டன. பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று ராணுவத்தின் வொயிட் கார்ப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சிங்போராவின் சத்ரூ பகுதியில், இரண்டு பாரா துணை பாதுகாப்புப்படை, ராணுவத்தின் 11 ஆர்ஆர் அசாம் ரைபில்ஸ் மற்றும் கிஷ்த்வார் எஸ்ஓஜி இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொண்டது.
இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், கைஃபுல்லா உட்பட மூன்று, நான்கு பயங்கரவாத குழுக்கள் சத்ரூ காட்டுப்பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் முற்றுகைக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
இதனிடையே ஒருவாரத்துக்கு முன்பாக, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியின், நாதிர் கிராமத்தில் நடந்த தனித்தனி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
அதேபோல் மே.13-ம் தேதி சோபியானின் ஜின்பதேர் கெல்லர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று லஷ்கர்-இ-தெய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிகையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பரந்த அளவிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் உள்ள பயங்கராவதிகளின் சொத்துகளை அழிக்கும் முயற்சியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.