

புதுடெல்லி: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் இரண்டு முகவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐஎஸ்ஐ ஸ்லீப்பர் செல்களின் வலையமைப்பை டெல்லி காவல்துறை ரகசிய நடவடிக்கையின் மூலம் முறியடித்தனர். 2025 ஜனவரி முதல் மார்ச் வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் மத்திய நிறுவனங்களும் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாள வம்சாவளியைச் சேர்ந்த ஐஎஸ்ஐ முகவர் அன்சாருல் மியான் அன்சாரி உட்பட இரண்டு முகவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவர் வசம் இருந்த ஆயுதப்படைகள் தொடர்பான பல ரகசிய ஆவணங்களையும் அவர்கள் மீட்டனர். இது தொடர்பான குற்றப்பத்திரிகை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ முகவர்கள் இருவரும் இப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அன்சாருல் மியான் அன்சாரி யார்? - பாகிஸ்தானுக்கு செல்ல முயன்றபோது டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து அன்சாரி கைது செய்யப்பட்டார். அவர் கத்தாரில் ஒரு டாக்ஸி ஓட்டுநர் என்றும், அங்குதான் ஐஎஸ்ஐ பிரதிநிதியை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் அன்சாரி பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு உயர் ஐஎஸ்ஐ அதிகாரிகள் அவருக்கு பல நாட்கள் பயிற்சி அளித்தனர்.
பயிற்சி முடிந்ததும், ஐஎஸ்ஐ அதிகாரிகள் அன்சாரியை நேபாளம் வழியாக டெல்லிக்கு அனுப்பினர். அவர்கள் அனைத்து ரகசிய ஆவணங்களின் சிடியையும் தயாரித்து பாகிஸ்தானுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அன்சாரியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, ராஞ்சியில் மற்றொரு நபரை போலீஸார் கைது செய்தனர்.
தேசிய புலனாய்வு அமைப்பு மும்பை விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் ஸ்லீப்பர் செல் நெட்வொர்க்கைச் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்த சில நாட்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது.
புனேவில் ஐ.இ.டி.யை தயாரித்தல் மற்றும் சோதனை செய்தல் தொடர்பான 2023ம் ஆண்டின் வழக்கில் தேடப்பட்ட இருவரும், ஜகார்த்தாவிலிருந்து இந்தியா திரும்பியபோது மும்பை சர்வதேச விமான நிலைய முனையம் 2 இல் கைதுசெய்யப்பட்டனர்.
அப்துல்லா ஃபயாஸ் ஷேக் என்கிற டயபர்வாலா மற்றும் தல்ஹா கான் என அடையாளம் காணப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தனர். மேலும் மும்பையில் உள்ள சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றத்தால் அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.
அவர்களைப் பற்றிய தகவல்களுக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று மத்திய புலனாய்வு நிறுவனம் அறிவித்தது. அவர்கள் மீதான வழக்கில், ஏற்கெனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் புனே ஸ்லீப்பர் செல் உறுப்பினர்களில் எட்டு பேருடன் சேர்ந்து, குற்றச் சதித்திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது.
ஷேக் மற்றும் கான், ஐஎஸ்ஐஎஸ் வழிகாட்டுதலின்படி இந்தியாவின் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய சதி செய்துள்ளனர்.
இந்திய ஆயுதப்படைகள் சமீபத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்தின. இதனையடுத்து ஸ்லீப்பர் செல் நெட்வொர்க்குகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.