

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் புதன்கிழமை இரவு காற்றுடன் பெய்த கனமழையினால் 2 பேர் உயிரிழந்தனர், 11 பேர் காயமடைந்தனர். மோசமான வானிலை காரணமாக 13-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
புதன்கிழமை இரவு பலத்த காற்றுடன் டெல்லியில் கனமழை பதிவானது. அப்போது இரவு 7.50 மணி அளவில் தென்கிழக்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது. அது அந்த வழியாக ட்ரை-சைக்கிளில் பயணித்த மாற்றுத்திறனாளி மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதேபோல டெல்லியின் கோகுல்புரி பகுதியில் 22 வயது இளைஞரான அசார் மீது மரம் விழுந்ததில் அவர் உயிரிழந்தார். முகர்ஜி நகர் பகுதியில் மழையினால் இரும்பு கேட் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். நேற்று டெல்லியில் பரவலாக பல இடங்களிலும் மழை பதிவானது. இந்த மழை தொடர்பான சம்பவங்களில் மொத்தம் 11 பேர் காயமடைந்தனர்.
மழை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 13-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதை விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் எக்ஸ் தள பதிவு மூலம் உறுதி செய்துள்ளன.
புழுதிப் புயலை அடுத்து டெல்லியில் மழை பதிவானது. நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிந்தது. இந்த மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, போக்குவரத்து நெரிசல், மரங்கள் வீதிகளில் விழுந்த காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையும் தாமதமானதாக தகவல். சிவப்பு, மஞ்சள் மற்றும் பிங்க் லைனில் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டதை டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் உறுதி செய்தது.