Published : 22 May 2025 07:55 AM
Last Updated : 22 May 2025 07:55 AM
புதுடெல்லி: ‘‘வக்பு என்பது இஸ்லாமிய கருத்தாக இருந்தாலும், அது இஸ்லாமின் அடிப்படையான பகுதியாகக் கருதப்படுவதில்லை. எனவே, அரசியல்சாசனப்படி அதை அடிப்படை உரிமையாக கோர முடியாது’’ உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று கூறியது.
வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த மாதம் ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து முக்கிய எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தன. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஏ.ஜி.மாஸி அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ அரசு நிலத்தை உரிமை கோர யாருக்கும் உரிமை கிடையாது. அரசுக்கு சொந்தமான நிலம் வக்பு நிலமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதை நிலத்தை அரசு கைப்பற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது’’ என்றார்.
இதை எதிர்த்து மனுதாரர்கள் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ராஜீவ் தவான், அபிஷேக் மானு சிங்வி ஆகியோர், ‘‘ வக்பு கவுன்சிலையும், வக்பு சொத்துக்களையும் அபகரிக்கும் நோக்கில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்றனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை. அவை சட்டப்பூர்வமானதாக கருதப்படும். இந்த சட்டம் அரசியல்சாசனத்துக்கு எதிரானது என மனுதாரர்கள் நிருபிக்க வேண்டும் என்றும், சட்டத்தில் உள்ள விதிமுறை மீறல்கள், தவறுகள் தொடர்பாக போதிய ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்றும் தொடர்ந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:
வக்பு என்பது இஸ்லாமிய கருத்து. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அது இஸ்லாமின் அடிப்படையான பகுதியாகக் கருதப்படுவதில்லை. எனவே, அரசியல்சாசனப்படி அதை அடிப்படை உரிமையாக கோர முடியாது. வக்பு என்பது இஸ்லாமின் அடிப்படை பகுதியாக நிருபிக்கப்படும்வரை, மற்ற வாதங்கள் எல்லாம் அர்த்தமற்றவை.
140 கோடி மக்களின் சொத்துக்களுக்கு பாதுகாவலனாக மத்திய அரசு உள்ளது. பொது சொத்துக்கள் சட்டவிரோதமாக மாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. வக்பு சொத்துக்களுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், வக்பு சொத்துக்கள் பெருமளவில் அபகரிக்கப்படுகிறது என பொய்யான கதை கூறப்படுகிறது.
அறக்கட்டளை பணிக்காக அமைக்கப்பட்டதுதான் வக்பு. மதச்சார்பற்ற பணிகளை மட்டுமே வக்பு வாரியம் மேற்கொள்கிறது. மதம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவதில்லை. இதில் முஸ்லிம் அல்லாத 2 பேரை நியமிப்பதால் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது?
கடந்த 1956-ம் ஆண்டு இந்து சட்ட மசோதா வந்தபோது, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், சமணர்கள் ஆகியோரின் தனிப்பட்ட சட்ட உரிமைகள் எல்லாம் பறிபோனது. அப்போது முஸ்லிம்கள் மட்டும் ஏன் விட்டுவைக்கப்பட்டனர் என யாரும் கூறவில்லை. இவ்வாறு துஷார் மேத்தா வாதிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT