Published : 21 May 2025 04:48 PM
Last Updated : 21 May 2025 04:48 PM
புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பூஜா கேத்கருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், பூஜா விசாரணையில் துளியும் ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவருக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த டெல்லி போலீஸாரையும் உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது.
“பூஜா கொலைகாரரோ, தீவிரவாதியோ இல்லை. நீங்கள்தான் விசாரணையை முடித்திருக்க வேண்டும். அதற்காக உங்களிடம் ஒரு வழிமுறை இருந்திருக்கும். அவர் இப்போது அனைத்தையும் இழந்துவிட்டார். அவரால் எங்கேயும் வேலை பெற முடியாது. இந்த வழக்கின் தன்மையைப் பார்க்கும்போது டெல்லி உயர் நீதிமன்றமே பூஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கியிருக்கலாம்” என்று நீதிமன்றம் தெரிவித்தது. அதேவேளையில், பூஜா கேத்கர் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
நடந்தது என்ன? - கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வில் (யுபிஎஸ்சி) தேர்ச்சி பெற்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் பூஜா மனோரமா திலீப் கேத்கர். இவர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
பார்வைக் குறைபாடு, மூளை திறன் குறைபாடு ஆகியவை தனக்கு உள்ளதாகக் கூறி மாற்றுத் திறனாளி சான்றிதழ் கோரி அவர் விண்ணப்பித்து இருப்பதாக புகார் எழுந்தது. மேலும் புனேயில் அவர் உதவி ஆட்சியராக இருந்தபோது, பதவியை துஷ்பிரயோகம் செய்து பிறரை மிரட்டியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் பூஜா சிக்கினார். இதைத் தொடர்ந்து, அவர் வாஷிம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பின், அவர் தொடர்பான முழு விவரங்களை ஆய்வு செய்ய மத்திய பணியாளர் துறையின் கூடுதல் செயலர் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, எம்பிபிஎஸ் படிப்பதற்காக 2007-ம் ஆண்டில் அவர் ஓபிசி இடஒதுக்கீட்டைத் தவறாகப் பயன்படுத்தினார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் மாற்றுத் திறனாளி இல்லை என்றும் அவர் எம்பிபிஎஸ் படித்த கல்லூரியின் இயக்குநர் தெரிவித்தார். 2007-ம் ஆண்டில் புனேயில் உள்ள காஷிபாய் நவாலே மருத்துவக் கல்லூரியில் பூஜா கேத்கர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார்.
இது தவிர பூஜா 12 முறை யுபிஎஸ்சி தேர்வுகளை எழுதியதும் அம்பலமானது. ஒவ்வொரு முறையும், அவர் தனது பெற்றோர் பெயரையும் கூட போலியாக சித்தரித்து தேர்வு எழுதியிருந்தார். இத்தகைய புகார்கள் காரணமாக பூஜா கேத்கர் மீது மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், இன்று (மே.21) அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT